விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை கரூர்விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை

கரூர்: பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கூறினார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.கடந்த மாதம் 27ம்தேதி அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில், விவசாயிகளிடம் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் பதில் தெரிவித்தார். தொடர்ந்து, இந்த கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட கலெக்டர் பதில் அளித்து தெரிவித்துள்ளதாவது: புகளூர் பகுதியில் விவசாயிகள் எளிதாக சென்று வரும் வகையில் ரயில்வே பாதையை சீரமைத்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவும், நங்காஞ்சியாறு பகுதியில் நில எடுத்ததை தொடர்ந்து உரிய இழப்பீடு பெற்று தருவது குறித்தும், கூட்டு பட்டாவை தனிப் பட்டாவராக மாற்றி தருவது குறித்தும், ஆக்ரமிப்பு அகற்றப்பட்ட இடங்களை சீரமைத்தல், பணிக்கம்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்திற்கு சென்று வருவதற்கு பாலம் அமைப்பது, நீர் வழி வாய்க்கால் அடைப்பு இருப்பதை தூர்வாரி தருவது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது, குளித்தலை பகுதியில் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகத்தில் நெல் கொள்முதல் செய்யும் குத்தகைதாரர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக அடங்கல் வழங்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

தண்ணீர் பள்ளி முதல் சிவாயம் வரை சாலை குறுகலாக உள்ளது மற்றும் இடையில் மரக்கன்றுகள் நடுவதால் பேரூந்து செல்வதற்கு சிரமமான நிலையும், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதை சீரமைத்து தருவது, சேந்தமங்கலம் கால்நடை மருந்தகத்தில் செயல்படுத்த மருத்துவர் அவசர சிகிச்சைகள் உடனடியாக செய்து தர முன்வர வேண்டும் என்பது குறித்தும் பதில் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுப்பணித்துறை மூலம் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பது குறித்தும், தரகம்பட்டி பகுதியில் 100 நாள் வேலை மூலம் விவசாய பணிகளுக்கு ஆட்களை வழங்குவது, மாயனூர் பகுதியில் மாணவ, மாணவிகளுக்கு பொழுது போக்கு அம்சமாக விளையாட்டு மைதானம் அமைப்பது, புனவாசிபட்டி பகுதியில் சமூதாயக் கூடம் அமைத்து தருவது, அத்திப்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதை தடுத்து பாதுகாப்பு ஏற்படுத்திட உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும், சிறுத்தை நடமாட்டத்தை மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறோம், தற்போது உள்ள சூழ்நிலை சிறுத்தை நடமாட்டம் இல்லைடி என வனத்துறையினர் உறுதி செய்துள்ளார்கள்.

ஆனால், தொடர் கண்காணிப்பில் உள்ளோம். தற்போது இறந்து போன ஆடுகள் வெறிநாய்களால் கடித்து இறந்துள்ள்து என கால்நடை மருத்துவர்களால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவும், இது குறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆடுகளுக்கான காப்பீடுகளை கால்நடைத்துறையினர்களை அணுகி உங்களுடைய ஆடுகளுக்கு காப்பீடு செய்யுங்கள், நாயினால் இறந்து போன ஆடுகளுக்கு முழு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், விவசாயிகள் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு உரிய காலத்தில் அவர்களின் கோரிக்கை குறித்து தீர்வு காணப்பட வேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். இதனடிப்படையில் 94 மனுக்கள் வரப்பெற்றன. இதனைத் தொடர்ந்து, பட்டு வளர்ச்சித்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.102900 லட்சம் மதிப்பில் மல்பெரி நடவு மானியமும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ. 85000 மதிப்பில் பவர் டில்லர் இயந்திரமும், எஸ்எம்ஏஎம் திட்டத்தின் கீழ் ரூ. 2,06,920 மதிப்பில் தார்பாலின், 1 பயனாளிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 150 மதிப்பில் திரச உயிர் உரமும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துஐற சார்பாக 1 பயனாளிக்கு ரூ. 10ஆயிரம் மதிப்பில் வேளாண் இடு பொருட்களும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் 1 பயனாளிக்கு ரூ. 4ஆயிரம் மதிப்பில் சூரிய விளக்கு பொறியும் என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ. 4,11,070 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், வேளாண்மை இணை இயக்குநர் சிவசுப்ரமணியன், மாவட்ட வன அலுவலர் சரவணன், கோட்டாட்சியர்கள் ரூபினா, புஷ்பாதேவி உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: