×

மலைப்பகுதி மாணவர்களுக்காக ெகாடைக்கானலில் இன்று நடக்கிறது திறனறிவு தேர்வு: தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு

கொடைக்கானல், பிப். 25: தினகரன் செய்தி எதிரொலியாக கொடைக்கானல் மலைப்பகுதி மாணவ, மாணவிகளுக்கு திறனறிவு தேர்வு வத்தலக்குண்டுவில் நடத்தப்படாமல், கொடைக்கானலிலே இன்று நடைபெறவுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்ததுடன், தமிழக அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான திறனறிவு தேர்வு வழக்கமாக கொடைக்கானல் மலைப்பகுதியிலேயே குறிப்பிட்ட பள்ளிகளில் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு கொடைக்கானல் மற்றும் மேல்மலை பகுதிகளை சேர்ந்த பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான திறனறிவு தேர்வு வத்தலக்குண்டுவில் நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறை எடுத்தது.

இந்த தேர்வு வத்தலக்குண்டுவில் நடத்தப்பட்டால் கொடைக்கானல் பகுதி மாணவ, மாணவிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக கொடைக்கானலில் இருந்து சுமார் 30, 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேல்மலை பகுதிகளான மன்னவனூர், பூம்பாறை, பூண்டி, கவுஞ்சி, போளூர், கிளாவரை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் திறனறிவு தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதுவதற்கு முந்தைய நாளே வத்தலக்குண்டு சென்று அங்கு தங்கி அடுத்த நாள் தேர்வு எழுதக்கூடிய நிலை ஏற்பட்டது.

இதனால் நேர விரயம் ஏற்படுவதுடன், பொருட்செலவும் ஏற்படும். மேலும் மலைக்கிராமங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களே இருப்பதால், பெற்றோர்கள் இந்த திறனறிவு தேர்விற்கு தங்களது பிள்ளைகளை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. எனவே வத்தலக்குண்டுவில் நடைபெறும் திறனறிவு தேர்வை கொடைக்கானலிலேயே நடத்த வேண்டும் என மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுகுறித்த செய்தி நேற்று தினகரன் நாளிதழில் விரிவாக வெளியானது.

இதன் எதிரொலியாக மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வி துறை இன்று (பிப்.25ம் தேதி) நடைபெற இருந்த திறனறிவு தேர்வை கொடைக்கானல் மாணவ, மாணவிகளுக்காக வத்தலக்குண்டுவில் நடத்தாமல் கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்த முடிவு செய்துள்ளது. இந்த திறனறிவு தேர்வினை கொடைக்கானல் மலைப்பகுதியை சேர்ந்த 145 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். மீண்டும் கொடைக்கானலிலேயே தேர்வு மையத்தை அமைத்ததற்காக மலைப்பகுதி மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags : Ekadaikanal ,Tamil Nadu Govt ,
× RELATED மக்களுக்கு நிவாரண பொருள் வழங்க...