×

தாடிக்கொம்புவில் சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமித்து சந்தை: போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் அவதி

திண்டுக்கல், பிப். 25: திண்டுக்கல் அருகே தாடிக்கொம்புவில் சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமித்து காய்றி சந்தை கடைகள் அமைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே கடைகளுக்கு தனி இடம் ஒதுக்கி தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு பேரூராட்சி தேசிய நெடுஞ்சாலை (என் ெஹச்) 7ல் உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து தாடிக்கொம்பு ஊருக்குள் போவதற்கு இரண்டு பக்கமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வீஸ் ரோட்டில் தினந்தோறும் திண்டுக்கல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து அதிகளவு பஸ்கள் தாடிக்கொம்பு நகருக்குள் வந்து செல்கிறது.

இந்நிலையில் தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்ட கிழக்கு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த காய்கறி சந்தை மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை தொடரும். பொதுவாக மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த சர்வீஸ் ரோட்டின் அருகே அரசு பள்ளி இயங்குவதால் மாணவர்கள் மற்றும் திண்டுக்கல், வேடசந்தூர் பகுதிகளில் இருந்து அதிகப்படியான வாகனங்கள் செல்லும் இடமாகவும் இருக்கிறது. இவ்வளவு போக்குவரத்து நிறைந்த இந்த சர்வீஸ் ரோட்டில் 25க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தும் இடம் இருப்பதுடன் காய்கறி சந்தை தினத்தன்று சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமித்து அதிகப்படியான கடைகளும் வைக்கப்படுகின்றன.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனஓட்டிகளும், பாதசாரிகளும் ஒதுங்க கூட இடமில்லாத அவலநிலை ஏற்படுகிறது. இதுதவிர, காய்கறி சந்தைக்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தை ரோட்டின் இருபுறங்களிலும் வரிசையாக நிறுத்தி வைப்பதாலும் விபத்து ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது. மேலும் காய்கறி சந்தை நடைபெறும் இடம் அதிகப்படியான மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை பயன்படுத்தி செயின் பறிப்பு, டூவீலர் திருட்டு போன்ற குற்றச்சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜா கூறுகையில், ‘இந்த காய்கறி சந்தை நடைபெறும் சர்வீஸ் ரோடு தாடிக்கொம்பு பேரூராட்சி, காவல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம் ஆகியவற்றிற்கு செல்லும் சாலையாகவும் மற்றும் அரசு- தனியார் பஸ்கள், தனியார் மில் பஸ்கள், சரக்கு லாரிகள் செல்லும் சாலையாகவும் உள்ளது. இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு- தனியார் அலுவலகத்துக்கு வேலைக்கு செல்வோர், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தினசரி போக்குவரத்து நெரிசலில் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இதில் வியாழக்கிழமை காய்கறி சந்தையன்று மேலும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே தாடிக்கொம்பு பேரூராட்சி நிர்வாகம் சர்வீஸ் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி காய்கறி சந்தைக்கு என்று தனி இடம் ஒதுக்கி தருவதுடன், அந்த இடத்தில் மட்டுமே கடைகள் போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் போக்குவரத்து நெரிசலை தடுக்க பீக் அவர் நேரங்களில் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும்’ என்றார்.

Tags : Thadikkombu ,
× RELATED தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் 12 அடி உயர துலாபாரம் அமைப்பு