போரூர் அருகே சிசிடிவி கேமராக்களுடன் புதிய புறக்காவல் நிலையம்: ஆவடி காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்

குன்றத்தூர்: போரூர் அருகே பொதுமக்கள் புகார் கொடுப்பதற்கு வசதியாக கண்காணிப்பு கேமராக்களுடன், புதிய புறக்காவல் நிலையத்தை ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார். ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மாங்காடு காவல் நிலையத்தின் எல்லைகள் மிகவும் பெரிதாக உள்ளது. இதனால், முகலிவாக்கம், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏதேனும் குற்றச் செயல்கள் நடைபெற்றால், மாங்காடு காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு, அதிக காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே, முகலிவாக்கத்தில் புதிய காவல் நிலையம் அமைத்துத் தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில், முகலிவாக்கம் ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய புதிய புறக்காவல் நிலையம் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது. அதனை நேற்று ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நேரடியாக வருகை தந்து குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். புதிதாக திறக்கப்பட்ட இந்த புறக்காவல் நிலையத்தில், தினமும் மூன்று உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆறு போலீசார் கொண்ட குழுவினர் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு இருப்பர்.

 எனவே, இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் யாருக்கேனும், ஏதேனும் புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்றால், இந்த புறக்காவல் நிலையத்தில் முதற்கட்டமாக புகார் தெரிவித்து பயன் பெறலாம். அவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், ஆவடி காவல் துணை ஆணையாளர் பாஸ்கரன், போரூர் உதவி ஆணையர் ராஜுவ் பிரின்ஸ் ஆரோன், மாங்காடு ஆய்வாளர் ராஜு மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் சால்வை அணிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Related Stories: