×

குடும்ப பிரச்னையால் விரக்தி அரசு பெண் ஊழியர், மகனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி: தாம்பரம் அருகே பரபரப்பு

தாம்பரம்: குடும்ப பிரச்னையால் மனமுடைந்த  அரசு பெண் ஊழியர், தனது 4 வயது மகனுடன் மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். டிரைவரின் சாமர்த்தியத்தால் இருவரும் காயத்துடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் தாம்பரம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் செந்தில்நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவரது, மனைவி பிரேமலதா. சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறையில் அரசு ஊழியராக வேலை செய்கிறார்.

இவர்களுக்கு 10 மற்றும் 4 வயதில் மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் 10 வயது மகனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், கலந்துகொள்ள வந்த உறவினர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, குடும்பத்தினர் பிரேமலதாவை திட்டியதாக கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்த பிரேமலதா, நேற்று காலை 4 வயது மகன் ஆயுஷூடன் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்து, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்வதற்காக மகனுடன் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரயில் டிரைவர், ஹாரன் அடித்து எச்சரித்துள்ளார். ஆனாலும், பிரேமலதா தண்டவாளத்தில் இருந்து விலகி செல்லாததால் ரயிலை நிறுத்த முயன்றுள்ளார். இருப்பினும் ஆயுஷ் மற்றும் பிரேமலதா ஆகியோர் மீது ரயில் மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், தலையில் பலத்த காயமடைந்த இருவரையும், சக பயணிகள் மூலம் அதே ரயிலில் ஏற்றி, தாம்பரம் ரயில் நிலையம் அழைத்து வந்தனர்.

ரயில் நிலையம் அழைத்து வரும் முன்பே ஆம்லன்சுக்கு தகவல் தெரிவித்ததால் ஆம்புலன்ஸ் தயாராக நின்றது. பின்னர், இருவரையும் அதில் ஏற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரித்தபோது, குடும்ப பிரச்னையில் மனவேதனையில் தற்கொலைக்கு முயன்றதாகவும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவேண்டாம் எனவும் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

Tags : Tambaram ,
× RELATED பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு:...