நன்னிலத்தில் தொழில்நுட்ப பூங்கா கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நன்னிலம், பிப்.24: நன்னிலத்தில் தொழில் பூங்கா கட்டப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். திராவிட இயக்க ஆட்சியாளர்கள், முயற்சியால் அனைத்து தரப்பு மக்களும், கல்வியில் முன்னேறி வருகின்றனர். வேலைவாய்ப்புகளுக்காக, வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. நன்னிலத்தில் படித்த இளைஞர்களுக்கு உள் ஊரிலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில், தொழில்நுட்ப பூங்கா ஒன்று அமைக்கப்பட்டதால் இவர்கள் வேலை தேடி வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் நிலை மாறும். இந்த கோரிக்கை பலதரப்பு மக்களிடம் இருந்து நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நன்னிலத்தில் கலை அறிவியல் கல்லூரி ஒன்று தொடங்கப்பட்ட நிலையில், படித்த பட்டதாரி எண்ணிக்கை நன்னிலம் பகுதியில் மிகுதியாக உள்ளது.

பல படித்த இளைஞர்கள், மீண்டும் விவசாய கூலி வேலைக்கு செல்லக்கூடிய நிலையும் உள்ளது. பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கும், படித்த கல்விக்கு ஏற்ப, வேலைவாய்ப்பு என்ற நிலை ஏற்படுவதற்கும், வாய்ப்பு அமையும் வகையில், விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளர்களும் நிறைந்த பகுதியான நன்னிலத்தில், தொழில்நுட்ப பூங்கா ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை, மாணவர்களிடத்திலும், மாணவரின் பெற்றோர்கள் இடத்தில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தற்போது தமிழக அரசு, மக்கள் நலனை பேணி காக்கும் வகையில், பல்வேறு தொழில்நுட்ப பூங்காக்களை, தமிழகத்தில் துவங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வரும் நிலையில், பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில், பழமையான பெரிய தாலுகாவாக இருந்த, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என பெயர் பெற்ற நன்னிலத்தில், தொழில்நுட்ப பூங்கா ஒன்று அமைக்கப்பட வேண்டும். நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பெற்றோர்கள் மற்றும் படித்த மாணவர்களின், எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: