×

ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமேலாளர் உறுதி

நாமக்கல், பிப்.24: நாமக்கல் புறவழிச்சாலையில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என ராஜேஸ்குமார் எம்பி., தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் நேரில் கோரிக்கை விடுத்தார். தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள 6 ரயில்ேவ கோட்டங்களிலும் மேற்கொள்ளவுள்ள திட்டப்பணிகள் குறித்து, அந்தந்த கோட்டங்களில் அப்பகுதி எம்பிக்களுடன் ஆலோசனை கூட்டத்தை பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நடத்தி வருகிறார். இந்தவகையில், சேலம் ரயில்வே கோட்டத்திற்கான எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நேற்று, கோட்ட அலுவலகத்தில் நடந்தது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமை வகித்தார். சேலம் கோட்ட மேலாளர் கௌதம் னிவாஸ் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மேல்சபை எம்பியுமான ராஜேஸ்குமார் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்கே சிங்கிடம், மனு ஒன்றை கொடுத்தார் அதில் கூறப்பட்டிருப்பதாவது: நாமக்கல் நகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நகரைச் சுற்றி 22.38 கிமீ தூரத்துக்கு புறவழிச்சாலை (சுற்றுவட்டசாலை) அமைக்கப்பட இருக்கிறது. இந்த புறவழிச்சாலை என்.எச் 44ல் உள்ள முதலைப்பட்டியில் இருந்து வள்ளிபுரம் வரை அமைகிறது. முதலைப்பட்டியில் அமைக்கப்பட்டு வரும், நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டையும், புறவழிச்சாலை இணைக்கிறது. வரும் செப்டம்பர் மாதத்துக்குள் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 புறவழிச்சாலையில், நாமக்கல் மற்றும் களங்காணி ரயில்வே ஸ்டேசனுக்கு இடையில், ரயில்வே மேம்பாலம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி ஏற்கனவே மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளளது. ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான திட்டமதிப்பீடு அதற்கான நிர்வாக அனுமதி இன்னும் ரயில்வேத்துறையால் அளிக்கப்படவில்லை. கடந்த 5 மாதமாக இதற்காக மாநில அரசு காத்திருக்கிறது. புதிய பேருந்து நிலையம் முழுமையாக செயல்பட விரைவாக ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டியுள்ளது. எனவே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவாக தொடங்க மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட, ரயில்வே பொதுமேலாளர், உடனடியாக ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

புறவழிச்சாலை பணி தீவிரம்
நாமக்கல்  நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நகரை சுற்றி 22 கிமீ  தூரத்துக்கு புறவழிச்சாலை (சுற்றுவட்டசாலை) அமைக்கும் திட்டம் கடந்த திமுக  ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. புறவழிச்சாலை அமைக்க 142 ஏக்கர் நிலம்  கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கப்பட்டது. ஆனால்  கடந்த 10 ஆண்டுகளில் இந்த திட்டம் முழுமை அடையவில்லை. தற்போது புறவழிச்சாலை  அமைக்கும் பணிக்கான முன் ஏற்பாடுகள் துவங்கியுள்ளது. தேவையான நிலம்  கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர்களுக்கு இழப்பீடும்  அளிக்கப்பட்டு வருகிறது.

 முதலைப்பட்டியில் அமையும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து  சுமார் 1 கிமீ தொலைவில்தான் புறவழிச்சாலை துவங்குகிறது. புதிய பேருந்து  நிலையம் கட்டுமான பணி முடிவடையும் முன், புறவழிச்சாலை அமைக்கும் பணி  துவங்கினால்தான் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.  இதையடுத்து அதற்கான முன்ஏற்பாடு பணிகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக  செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி மேற்கொண்டு வருகிறார். கள ஆய்வில் முதல்வர் திட்டத்தில் சேலம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் இதுபற்றி ராஜேஸ்குமார் எம்பி மனு கொடுத்தார். எனவே முதற்கட்டமாக நாமக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து  துறையூர் சாலை வரை 8 கிமீ தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : General Manager ,
× RELATED சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு