800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது

அருப்புக்கோட்டை, பிப்.24: அருப்புக்கோட்டையில் சரக்கு வேனில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரம் பகுதியில் நேற்று காலை நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த சரக்கு வேனை அருப்புக்கோட்ைட நகர் பயிற்சி எஸ்ஐ திருப்பதி மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வேனில் 800 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. வேனில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இருவரும் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ராஜபாண்டி(28), மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(20) என்பதும், வேனில் ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் விருதுநகர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: