×

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

காஞ்சிபுரம், பிப். 24: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், இந்து சமய அறநிலைய துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இதில், மணமக்களுக்க 30 வகையான சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தன்படி, இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி விண்ணப்பம் பெறப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 2 ஜோடிகளுக்கு பட்டுச்சேலை, பட்டுவேட்டி, கைக்கடிகாரம், தங்கத்தாலி போன்றவை வழங்கப்பட்டது. பின்னர், பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

விழாவில், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்ட கோயில்கள் அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வி, கோயில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், முத்துலட்சுமி, கோயில் ஆய்வாளர் பிரித்திகா மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு ஜோடிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். திருப்போரூர்:  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்படும் என சட்ட மன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் அறிவித்தனர். இதன்படி, கடந்த டிசம்பர் மாதம் 5 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த ஆண்டும் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருமணம் நடத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்களில் தகுதியான 2 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேற்று கோயில் உற்சவ மண்டபத்தில் முறைப்படி திருமணம் நடத்தப்பட்டது.

இதில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர். குன்றத்தூர்: குன்றத்தூர் முருகன் கோயிலில், இந்து அறநிலையத்துறை சார்பில், நேற்று காலை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முன்னாள் அறங்காவலரும், உபயதாரமான செந்தாமரை கண்ணன் ஏற்பாட்டில் ஒரே நாளில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.  இதில், கோயில் செயல் அலுவலர்  கன்யா, இராமச்சந்திரன், குணசேகரன் வார்டு உறுப்பினர்கள் கார்த்திக், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சீர் வரிசை
திருமண ஜோடிகளுக்கு இந்து சமய  அறநிலையத்துறை சார்பில் ₹10 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தாலி, ₹2  ஆயிரம் மதிப்பில் மணமக்கள் ஆடை, ₹2 ஆயிரம் மதிப்பில் மணமக்கள் தரப்பை  சேர்ந்த 20 நபர்களுக்கு உணவு, மாலை, ₹3 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை  பாத்திரங்கள் உள்ளிட்ட ₹50 ஆயிரம் மதிப்பில் அனைத்தும் இலவசமாக  வழங்கப்பட்டது.

Tags : Kanchi ,Sengai ,
× RELATED கருடன் கருணை