×

விதிமுறைகளை மீறியதால் விபரீதம் ரயிலில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு:  தற்கொலை எண்ணிக்கை உயர்வு  ரயில்வே காவல்துறை தகவல்

திருவள்ளூர், பிப். 24: 2022ம் ஆண்டு ரயிலில் அடிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளதாக, தமிழக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. ரயில் தண்டவாளத்தை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள் என ரயில்வே காவல்துறை தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்களும் இதற்கு கொஞ்சமும் செவிசாய்க்காமல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுதல், எச்சரிக்கையைக் கவனிக்காமல் செல்லுதல், பாலத்தில் நடந்து செல்லாமல் இருப்புப் பாதையில் நடத்தல், செல்போன் பேசிக்கொண்டே ரயில்பாதையைக் கடந்து செல்லுதல், மற்ற மின்னணு சாதனங்களை வைத்துக்கொண்டு ரயில் பாதையில் கடப்பதால் இந்த விபத்துகள் நேரிட்டுள்ளன.

தண்டவாளத்தைக் கடந்து செல்பவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுதல், ரயில் தண்டவாளம் செல்லும் பகுதியில் சுவர் எழுப்புதல், எச்சரிக்கைப் பலகை வைத்தல் போன்றவை மூலம் விபத்துகளைத் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தும் விபத்துகள் நடக்கின்றன என்பது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரயில் தண்டவாளங்களை கடக்கும் போது ஏற்படும் மரணங்கள் மற்றும் தற்கொலை விவரங்களை ரயில்வே காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தண்டவாளங்களை கடக்கும் போது கவனக்குறைவால் ரயிலில் மோதி அடிபட்டு இறப்பது கடந்த 2020, 2021 ஆண்டுகளை விட 2022 ல் அதிக அளவில் அதிகரித்துள்ளது.

அதேபோல ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் கடந்த ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது என ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளை  ஒப்பிடுகையில் 2022ம் ஆண்டு கவன குறைவாக மற்றும் அத்துமீறி தண்டவாளங்களை  கடக்க முற்படும்போது ரயிலில் அடிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு  உயர்ந்துள்ளதாக தமிழக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. அதே போல  ரயிலில் விழுந்து தற்கொலை செய்வது 2021 மற்றும் 2022ம் ஆண்டு அதிகரித்துள்ளது. 2018, 2019, 2020 ஆண்டுகளை  காட்டிலும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை  செய்து கொண்டோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும்,  கடந்த 2022 ஆம் ஆண்டு 488 அடையாளம் காணப்படாத சடலங்கள் மீட்கப்பட்டதாகவும்  ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து  கொள்வோரை தடுப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக  ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. அதே வேளையில் தண்டவாளங்கள் கடப்பது  தண்டனைக்குரிய குற்றமென ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்,  ரயில் பயணங்களில் அல்லது ரயில் இருப்பு பாதை அருகே ஏதேனும்  அசாம்பாவிதங்கள் நடந்தால் 1512 என்ற உதவி எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது  9962500500 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம் என ரயில்வே  இருப்பு பாதை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரயில் மோதி இறந்தவர்கள்
ஆண்டு    ஆண்கள்    பெண்கள்    மொத்தம்
2018    1813    278    2091
2019    1837    260    2097
2020    776    145    921
2021    1123    190    1313
2022    1600    256    1856
தற்கொலை செய்து கொண்டவர்கள்
ஆண்டு    ஆண்கள்    பெண்கள்    மொத்தம்
2018    49    13    62
2019    83    24    107
2020    71    13    84
2021    204    18    222
2022    186    24    210

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...