×

அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவ ஆட்சேர்ப்புக்கு ஏப்.17ல் ஆன்லைன் தேர்வு

திருச்சி, பிப்.23: திருச்சியில் உள்ள மண்டல இராணுவ ஆள்தேர்வு மையத்தில் திருச்சி மண்டல இயக்குநர் கர்னல் தீபக்குமார் அளித்த பேட்டி: 2023- 2024 ம் ஆண்டிற்கான அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது. எனவே திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன் முதல்கட்டமாக இணையதளம் மூலம் நுழைவு தேர்விற்கு விண்ணப்பித்து, இணையதளம் மூலமே தேர்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.எனவே ஆர்வம் உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இந்த மாதம் பிப் 16 ம் தேதியில் இருந்து பதிவு செய்வதற்கான வசதி திறந்து விடப்பட்டுள்ளது. இதில் வருகிற மார்ச் 15 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 30 வரை இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக 176 இடங்களில் ஆன்லைன் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தேர்வு விண்ணப்பத்தாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வை நன்கு அறிந்துகொள்ளவும், இணையதளத்தில் பதிவுசெய்வது எப்படி மற்றும் ஆன்லைன் நுழைவுத்தேர்வில் கலந்துகொள்வது எப்படி’ பற்றிய கல்வி வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பத்தாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தே கணினி அடிப்படையிலான தேர்வில் கலந்துகொள்ளலாம். ஒரு விண்ணப்பத்தாரர் தேர்வு கட்டணமாக ரூ. 250/- செலுத்தவேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் அட்டை அல்லது பத்தாம் வகுப்பு படித்த சான்றிதழை பதிவு செய்ய வேண்டும். மேலும் தேர்வர்களுக்கு 14 நாட்களுக்கு முன்பே தேர்வு எழுதுவதற்கான அனுமதி கடிதம் அனுப்பி வைக்கப்படும். இந்த தேர்வானது வௌிப்படையாகவும், தகுதி அடிப்படையிலும் நடைபெறுவதால் ஆள் சேர்ப்புக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும் தகவல்களை பெற joinindianarmy@gov.in , jiahelpdesk2023@gmail.com மற்றும் 7996157222
என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என கூறினார்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு