×

(தி.மலை) 100 நாள் தொழிலாளர்கள் மூலம் தோட்ட பயிர் சாகுபடி சத்துணவு மையங்களுக்கு காய்கறி வழங்க ஏற்பாடு கலசப்பாக்கம் அருகே முன்மாதிரி திட்டம்

கலசப்பாக்கம், பிப்.23: கலசப்பாக்கம் அருகே 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களை கொண்டு தோட்ட பயிர் சாகுபடி செய்து சத்துணவு மையங்களுக்கு காய்கறிகளை வழங்கும் முன்மாதிரி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி தூர்வாருதல், குளம் வெட்டுதல், பண்ணை குட்டைகள் அமைத்தல் மற்றும் பயனற்ற ஆழ்துளை கிணறுகளில் மழைநீர் சேகரிக்கும் தொட்டி அமைத்தல், மரக்கன்றுகள் உற்பத்தி நிலையான சொத்துக்களை உருவாக்கும் பொருட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ளுதல் என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் ஒன்றியம் சிங்காரவாடி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் முள்ளங்கி, வெண்டை, கத்திரி, தக்காளி, புடலங்காய் பாகற்காய், கோஸ் உள்ளிட்ட பல்வேறு தோட்ட பயிர்களை ஒரு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இப்பணிகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது. இதற்காக கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் கீழ் விதைகள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் எதிர்க்காலத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளை அங்கன்வாடி பள்ளி சத்துணவு கூடம் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த காய்கறிகளை முழுக்க முழுக்க இயற்கை உரம் கொண்டு பயிரிட உள்ளனர். குறிப்பாக கிராம ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை உருவாக்கி, பயன்படுத்த தொடங்கியுள்ளனர். முன்மாதிரியான இந்த திட்டத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களைக் கொண்டு சிறப்பான முறையில் காய்கறி நடவுப் பணிகளை ஈடுபட்டுள்ளனர். இயற்கை உரம் மூலம் வளர உள்ள காய்கறிகளை அங்கன்வாடி மற்றும் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வழங்குவது வரவேற்கத்தக்கது. இத்திட்டத்தை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தினால் மிகுந்த சிறப்பாக இருக்கும்’ என்றனர். மேலும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சிகளில் வீடுகளுக்கு தோட்ட பயிர் விதைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை தங்களது பயன்பாட்டிற்காக பொதுமக்கள் தோட்ட பயிர்களை தங்கள் இல்லங்களில் சாகுபடி செய்து வருகின்றனர். இதன் மூலம் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சாகுபடி முன்மாதிரி திட்டத்தில் தினமும் 50க்கும் மேற்பட்ட 100 நாள் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : T.Malai ,Kalasapakkam ,
× RELATED 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் இன்று...