×

வீடுகளுக்கு வரி வசூல் செய்ய வலியுறுத்தி ஆர்டிஓ ஆபீசில் மக்கள் போராட்டம்

கோவில்பட்டி, பிப். 23: கோவில்பட்டி அருகே வீடுகளுக்கு வரி வசூல் செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மந்தித்தோப்பு சாலை, பெரியார் நகரில் சுமார் 300 குடும்பங்கள் வீடு கட்டி 10 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர். இதில் 150 வீடுகளுக்கு வீட்டு வரி, மின் இணைப்பு வசதி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது. மீதமுளள 150 வீடுகளுக்கான வீட்டு வரி வசூல் செய்யப்படவில்லை. இதையடுத்து, அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு முறையாக வீட்டு வரியை வசூலித்து ரசீது வழங்கி மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி செய்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கரும்பன், உதவி செயலாளர் பாபு ஆகியோர் தலைமையில், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு, கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், தங்கள் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், நகர செயலாளர் சரோஜா, துணை செயலாளர் முனியசாமி, மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன், மாவட்டக் குழு உறுப்பினர் பரமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : RTO ,
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு