×

பாளை வஉசி மைதானத்தில் புத்தகத்திருவிழா பிப்.25ல் துவங்குகிறது கலெக்டர் கார்த்திகேயன் பேட்டி

நெல்லை,பிப்.23: நெல்லை மாவட்ட பொருநை நெல்லை 6வது புத்தகத்திருவிழா பிப்.25ம் தேதி துவங்கி மார்ச் 7ம் தேதி வரை  நடக்கிறது. புத்தக திருவிழாவை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்கிறார். பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் 110 அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்படுகிறது என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் பொருநை நெல்லை 6வது புத்தக திருவிழா நடைபெறுவதையொட்டி அதற்கான உருவ சின்னமாக ‘ஆதினி’ என பெயரிடப்பட்ட இருவாச்சி பறவை சின்னத்தை வெளியிட்டும்,  புத்தக பாலம் திட்டத்தை துவங்கி வைத்தும் கலெக்டர் கார்த்திகேயன்  அளித்த பேட்டி; பல தமிழ் இலக்கிய எழுத்தாளர்களையும், சாகித்திய அகாடமி விருதாளர்களையும் உருவாக்கிய நெல்லை மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் பிப். 25ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை பாளை வ.உ.சி மைதானத்தில் 6வது ‘‘பொருநை நெல்லை புத்தகத்திருவிழா - 2023” நடத்தப்படவுள்ளது.  இப்புத்தகத் திருவிழா அனைவருக்குமான திருவிழாவாகவும், பன்முகத்தன்மையை போற்றும் திருவிழாவாகவும்  நடத்தப்படவுள்ளது. இப்புத்தகத்திருவிழா பிப்.25ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலான 3 தினங்களும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு அரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவின் உருவ சின்னமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த காடுகளில் வாழும் இருவாச்சி பறவை ‘ஆதினி” என்ற பெயரிடப்பட்ட சின்னம் தேர்வு செய்யப்பட்டு  வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் தொடர் வாசிப்பு, மாணவர் கையெழுத்து இதழ், கல்லூரி மாணவர்களுக்கான இதழியல் பயிற்சி பட்டறை மற்றும் புத்தக வெளியீடுகள் ஆகியவை நடைபெறுகின்றன. இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் 110 புத்தக அரங்குகள் அமைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘‘நெகிழி இல்லா” பிளாஸ்டிக் இல்லா புத்தகத்திருவிழாவாக  நடைபெறும். புத்தகத்திருவிழாவை காணவரும்  மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குத்தேவையான பாரம்பரிய உணவுகளை வழங்கிட உணவகங்கள் அமைக்கப்படவுள்ளன. இது சிறுதானியங்களுக்கான ஆண்டு  என்பதால் சிறுதானிய  உணவுகள், சிற்றுண்டிகளுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் இப்பாரம்பரிய உணவு அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

 இந்த ஆண்டு நடைபெறும் 6-வது புத்தகத்திருவிழாவில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிறை நூலகம், அரசுப்பள்ளிக்கூட நூலகங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளின் நூலகங்கள் ஆகியவற்றிற்கு புதிய புத்தகங்களை நன்கொடையாக வழங்கும் ‘‘புத்தகப் பாலம்” என்ற திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. புத்தகங்களை நன்கொடையாக வழங்க விருப்பமுள்ளவர்கள் 6வது புத்தகத்திருவிழாவிற்கான இணையதளத்திற்குள் (https;//nellaibookfair.in) சென்று ”புத்தகப்பாலம்” என்ற இணைப்பின் மூலமாக நன்கொடைகளை வழங்கலாம். இத்திட்டத்தின் மூலம் தாங்கள் பணம் செலுத்தியதற்கான மின்னனு சான்றிதழையும் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டம் வருகிற மார்ச் 7ம் தேதி  மாலை 5 மணியளவில் நிறைவு பெறும்.

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், நெல்லை மண் சார்ந்த புத்தகங்கள், சிறுவர் இலக்கியங்கள், சுய முன்னேற்ற நூல்கள் என 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் புத்தகங்களை வாங்கி நூலகங்களுக்கு வழங்கப்படும். பொதுமக்கள் மட்டுமில்லாமல், நமது மாவட்ட பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், அங்கே பணியாற்றிய ஆசிரிய பெருமக்கள் என அனைவரும் இத்திட்டத்தில் பங்கேற்று நூலகங்களுக்கு நல்ல நூல்களை பரிசளிக்க வேண்டும்.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் அனைவரும் தங்களை ஒருங்கிணைத்து கொள்ள வேண்டும். இது தவிர புத்தக கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்படும் சிறப்பு அரங்கில் புத்தகங்களாகவும் நன்கொடை வழங்கலாம். புத்தக திருவிழா துவக்க நிகழ்ச்சி பிப். 25ம் தேதி மாலை  3.30 மணிக்கு நடக்கிறது. விழாவை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்கிறார். நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகள், போட்டிகள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள (nellaibookfair.in) என்ற இணையதளம் வழியாக எளிதாக காணலாம். 11 நாட்களும் தினந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகளை நெல்லை மாவட்டத்தின் யூடியூப் பக்கத்தில் கண்டு மகிழலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

தொடர்ந்து புத்தகத்திருவிழாவிற்கான அழைப்பிதழை வெளியிட்டார். மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின்போது உதவி கலெக்டர் பயிற்சி கோகுல்,  கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது (பொ) .மூர்த்தி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார்,  பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், தேசிய தகவல் மைய மேலாளர் ஆறுமுக நயினார், எழுத்தாளர்கள் நாறும்பூநாதன், ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

தினமும் கலைநிகழ்ச்சி
புத்தகக்கண்காட்சியின் ஒரு பகுதியாக  செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  சிறப்பான திட்டங்கள் குறித்து “ஓயா உழைப்பின் ஓராண்டு  கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாண்டி” என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி  மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. பகல் நேரங்களில் பள்ளி மற்றும்  கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடைபெறும்.  மாலையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பல்வேறு அறிஞர்களின் கவிரங்கம்,  பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.  பள்ளிக்குழந்தைகளிடையே “என்னை ஈர்த்த புத்தகம்” என்ற தலைப்பில் புத்தக விமர்சனம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரிடம்  விருது பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.  இதழியல் தொடர்பான பயிற்சி அரங்குகளும் அமைக்கப்படுகிறது என பேட்டியின் போது கலெக்டர் தெரிவித்தார்.

Tags : Karthikeyan ,Palai Vausi Maidan ,
× RELATED இயக்குநர் சங்கரின் மகள் திருமண...