×

மாணவர்களின் எதிர்காலம் கருதி பெரியகுளம் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படுமா? எதிர்பார்ப்பில் பெற்றோர்கள்

பெரியகுளம், பிப். 23: பெரியகுளம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வர வேண்டுமென மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவானது நூற்றாண்டை கடந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தாலுகாவாகும். இப்பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. சுமார் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். அதே போல் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் தனியார் கல்வி நிறுவனங்கள் பல மடங்கில் பெருகி விட்டன. இப்பள்ளியில் தேர்ச்சி பெற்று உயர் கல்வி பெறுவதற்காக கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், மதுரை, விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி போன்ற பகுதிகளில் இயங்கி வரும் தனியார் கல்லூரிகளிலும் பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு கால விரயவும், பண விரயமும் ஏற்படுகின்றது.

பெரியகுளம் பகுதிகளில் பெரும்பாலான மாணாக்கர்கள் விவசாய குடும்பத்தில் இருந்தே வருவதால் தினமும் அவர்களால் பணம் செலவழித்து போக்குவரத்துக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தனியார் கல்லூரிகளில் பெரும்பாலான மாணவர்கள் அதிக கட்டணங்களை கட்ட முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். உயர்கல்வியை தொடர முடியாததால் சில மாணவர்கள் தனியார் நிறுவனங்களிலும், திருப்பூர், கோவை, சென்னை போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு சென்று விடுவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு, ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வி என்பது எட்டாக்கனியாக உள்ளதாக பெற்றோர்கள் புலம்பி தவிக்கின்றனர். மேலும் பெரியகுளத்தில் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளி நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாலை நேர கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மாலை நேர கல்லூரியில் மட்டுமே சிலர் படித்து வருகின்றனர். எனவே இதுபோன்று நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியில் இருக்கும் இந்த பெரியகுளம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆகவே பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், பெற்றோர்களின் கனவை நினைவாக்கும் பொருட்டு பெரியகுளம் பகுதியில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வர வேண்டும். அதேபோல் மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு செய்து தனியார் நிறுவனங்களில் கட்டணங்களை கட்ட முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ள மாணவர்களை கணக்கெடுத்து மீண்டும் அவர்கள் உயர்கல்வி பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகுளம் பகுதி பொதுமக்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் பாலு கூறுகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேனி அருகே வீரபாண்டி, கோட்டூர் மற்றும் ஆண்டிபட்டி பகுதியில் உள்ளது. இவை அல்லாமல் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள் உத்தமபாளையம் போடி பெரியகுளத்தில் உள்ளது. எனவே பெரியகுளம் விவசாய பகுதி என்பதால் ஏராளமான விவசாயிகள் இருப்பதால் தனியார் கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் அதிக பணம் செலவு செய்து படிக்க இயலாத சூழ்நிலை உள்ளது. பெரிய குளத்திற்கு என்று தனியாக ஒரு கலை அறிவியல் கல்லூரி அமைத்துக் கொடுத்தால் இப்பகுதி மக்கள் பெரும் பயன் பெறுவார்கள். எனவே இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் பெரியகுளத்தில் ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Government Arts and Science College ,Periyakulam ,
× RELATED கல்லூரி வளாகத்தில் இருந்த தேனீக்கள் தீவைத்து அழிப்பு