×

தவக்காலம் துவக்கம் சாம்பலால் நெற்றியில் சிலுவை அடையாளம்

மதுரை, பிப்.23: கிறிஸ்தவர்கள் துவக்கிய தவக்காலம் சாம்பல் புதனாக அனுஷ்டிக்கப்பட்டதை தொடர்ந்து தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடந்தது. அப்போது பங்குதந்தையர்களிடம் சாம்பலால் நெற்றியில் சிலுவை அடையாளத்தை கிறிஸ்தவர்கள் பெற்றுச் சென்றனர். கிறிஸ்தவர்களால் நேற்று முதல் துவங்கிய தவக்காலம் சாம்பல் புதனாக அனுஷ்டிக்கப்பட்டது. ஈஸ்டருக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலத்தில் கிறிஸ்துவர்கள் நோன்பு இருப்பார்கள். இந்த நாட்களை புனித நாட்களாக கருதுவர். இத்தவக்கால நாட்களில் மனக்கட்டுப்பாட்டுடன் தவ முயற்சிகளை மேற்கொள்வர். கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வைப் புனித படுத்தி கொள்வர்.

தவக்காலத்தின் போது ஒவ்வொரு நாளும் காலை அல்லது மாலை வேளைகளில் நடைபெறும் வழிபாடுகளில் கிறிஸ்தவர்கள் பங்கேற்பர். நேற்று தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி நிகழ்வுகள் நடந்தன. மதுரையில் கீழவாசலில் உள்ள புனித மரியன்னை தேவாலயம், கோ.புதூரில் உள்ள புனித லூர்தன்னை ஆலயம், ஆரப்பாளையத்தில் புனித வளனார் தேவாலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடந்தன. அப்போது பங்கு தந்தையர்களிடம் கிறிஸ்துவர்கள் சாம்பலால் நெற்றியில் சிலுவை அடையாளங்களை பெற்று சென்றனர்.

இதுதவிர நரிமேட்டில் உள்ள கதீட்ரல் உள்பட சிஎஸ்ஐ தேவாலயங்களில் திருவிருந்து ஆராதனைகள் நடந்தன. தவக்காலத்தின் இறுதி வாரம் வரும் ஏப்ரல் முதலில் துவங்குகிறது. அப்போது சிலுவைப் பாதை எனப்படும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளாக புனித வியாழன் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ஏப்.6ம் தேதி புனித வியாழனும், ஏப்.7ல் இயேசு சிலுவையில் அரையும் நாளான புனித வெள்ளியும் அனுஷ்டிக்கப்படுகிறது. இயேசு உயிர்த்தெழும் ஈஸ்டர் பண்டிகை ஏப்.9 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனை கிறிஸ்துவர்கள் கோலாகலமாக கொண்டாட உள்ளனர்.

Tags : Lent ,
× RELATED புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி