சிவகாசி சிவகாசி சிவன்கோவில் ரதவீதியில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி சிவன்கோவில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. நகரின் மைய பகுதியில் உள்ளதால் ஏராளமான பக்தர்கள் தினமும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். சிவன் கோவிலுக்குள் துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, முருகன், பைரவர், நவகிரகங்களும் நிறுவப்பட்டுள்ளதால் விசேஷ தினங்களில் சிவகாசி சுற்றியுள்ள கிராம பகுதியை சேர்ந்த பக்தர்களும் கோவிலுக்கு வருகின்றனர். சிவகாசி சிவன் கோவில் அறநிலைய துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிவன்கோவில் வடக்கு ரத வீதியில் கோவிலின் சுவரை ஒட்டி தள்ளுவண்டி பழக்கடைகள் அமைத்துள்ளனர். பக்தர்கள் கோவிலின் ரதவீதியை சுற்றி வர வழியின்றி அவதிப்படுகின்றனர். சிவன் கோவில் ரதவீதி சாலைகளில் தற்காலிக கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏராளமான நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி கடைகள் அமைத்துள்ளனர். சிவன் கோவில் ரதவீதி சாலைகள் சீரமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த சாலையில் எந்தவித பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை. இதனால் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சாலையை சீரமைக்கவும் தற்காலிக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.