நெல்லை, பிப்.22: தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு நெல்லையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.பாளை தெற்கு பஜார், லூர்துநாதன் சிலை அருகே நடந்த விழிப்புணர்வு பேரணியை பயிற்சி கலெக்டர் கோகுல் தொடங்கி வைத்தார். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ரெஜினா மேரி, கண்காணிப்பாளர் ஷீலா, பொதிகை தமிழ்ச்சங்க தலைவர் பேரா, செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், திருக்குறள் முருகன், ஓவியர் தங்கவேல், சிற்பி பாமா உள்ளிட்ட ஏராளமான தமிழ் ஆர்வலர்கள், ஜான்ஸ் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேரணி வஉசி மைதானம் பின்புறம் உள்ள சாலை, ரோஸ் மேரி சாலை, தபால் அலுவலகம், காவல் நிலையம், தெற்கு பஜார் வழியாக அரசு அருங்காட்சியகத்தை அடைந்தது. பேரணியின் முன் பகுதியில் சிலம்பக் கலைஞர் சங்கரன் ஆசான் குழுவினரின் சிலம்பாட்டம், திருமலை நம்பி குழுவினரின் தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பேரணியில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் மற்றும் சிறிய வணிகக் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிச் சென்றனர். இதுகுறித்து இத்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழி என கடந்த 1956ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர் பலகையை தமிழில் அமைக்க வேண்டும் என அரசு ஆணையிட்டு 66 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்று வரை பல நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்திலேயே உள்ளன. பெயர் பலகைகளில் உள்ள எழுத்துக்களை தமிழில் வைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது’ என்றனர்.
