வரவணி கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி செய்து தர வேண்டும் கிராமமக்கள் கோரிக்கை

ஆர்.எஸ் மங்கலம். பிப். 22: ஆர்.எஸ் மங்கலம் அருகே வரவணி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பொதுமக்களுக்கு மையானத்திற்கு செல்வதற்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ் மங்கலம் தாலுகாவில் ஆர்.எஸ் மங்கலத்தில் இருந்து சுமார் 6 கி.மீ தூரத்தில் உள்ள வரவணி கிராமம். இங்குள்ள ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு ஊருக்கு ஒதுக்குபுறமாக சுமார் 1 கி.மீ தூரத்தில் ஒரு மையானம் உள்ளது.  இந்த மையானத்திற்கு செல்வதற்கு அரசால் ஒதுக்கப்பட்டிருந்த பாதையை பலரும் ஆக்கிரமிப்பு செய்து விட்டதால் சுமார் 20 அடி அகலம் உள்ள பாதை சில இடங்களில் 5 அடி அகலம் கூட இல்லாமல் குறுகிவிட்டது.

இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.  பல நேரங்களில் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் பொழுது பிரச்னைகள் ஏற்பட்டு போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியுடன் இறந்த உடலை எடுத்து சென்று அடக்கம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இப்பகுதியில் மயானத்திற்கு செல்வதற்கான சாலை வசதி இல்லாததால் மக்கள் பல ஆண்டுகளாக அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து கடந்த ஆட்சியில் அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித பலனில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  எனவே இந்த ஆட்சியில் நீண்ட நாள் கோரிக்கையான மையனத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், முட்புதர்களையும் அகற்றி புதிதாக சாலை வசதி செய்து தரவேண்டும். அதே போல் குடியிருப்பு பகுதியின் மத்தியில் உள்ள காலி இடத்தில் ஒரு சமுதாய கூடம் ஒன்று கட்டி தர வேண்டும், கூடுதல் குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: