×

அன்னையின் 145வது பிறந்தநாள் விழா அரவிந்தர் ஆசிரமத்தில் குவிந்த வெளிமாநில பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம்

புதுச்சேரி,  பிப். 22: புதுச்சேரியில் அரவிந்தரின் முக்கிய சீடரான அன்னையின் 145வது  பிறந்த நாளையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து  வரிசையில் காத்திருந்து மலர்தூவி தரிசனம் செய்தனர்.  புதுச்சேரியை  அடுத்த ஆரோவில் சர்வதேச நகரை அமைத்த அன்னை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 1878  பிப்ரவரி 21ம்தேதி பிறந்தார். அன்னையின் இயற்பெயர் மிர்ரா அன்போன்ஸா  ஆகும். சிறு வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய அன்னை, அரவிந்தரின்  ஆன்மீக கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1914ல் புதுச்சேரி வந்தார். அன்னையின்  பெரும் முயற்சியால்தான் புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமமும், ஆரோவில்  சர்வதேச நகரமும் தோற்றுவிக்கப்பட்டன.
 இந்நிலையில் அரவிந்தர்  அன்னையின் 145வது பிறந்ததினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை வசித்த அறை பக்தர்களின்  தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. மேலும் வண்ண மலர்களால்  அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அன்னை சமாதியை திரளான பக்தர்கள்  வரிசையில் காத்திருந்தும், காத்திருப்புக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில்  அமர்ந்தும் அமைதியாக வழிபட்டனர்.  பின்னர் கூட்டு தியானமும்  மேற்கொண்டனர். பல்வேறு மாநில பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா  பயணிகளும் மலர்களை தூவி தரிசனம் செய்தனர். இதேபோல் ஆரோவில்லில் கூட்டு  தியானமும் நடைபெற்றது. இதையொட்டி 2 இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டிருந்தன.

Tags : Aurobindo Ashram ,
× RELATED புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில்...