×

ஊத்துக்குளி அருகே குளக்கரையை உடைத்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருப்பூர், பிப்.22:  ஊத்துக்குளி அருகே,  குளக்கரையை உடைத்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. திருப்பூரில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க பல்லடம் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி கொடுத்த மனுவில்,  ‘‘பல்லடம் வட்டம் பூமலூர் கிராமத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்திற்கு கையகப்படுத்திய நிலத்திற்கு, இதுவரை நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. பூமலூர் கிராமத்தில் மெயின் வாய்க்கால் கிளை வாய்க்கால்களுக்கு கையப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என கோரியுள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட குழு தலைவர் மதுசூதனன் மற்றும் செயலாளர் குமார் அளித்த மனுவில், ‘‘செங்காளிபாளையத்தில் அமைந்துள்ள அண்ணா நகர் ஏரியில் மழைக்காலங்களில் ஓடையில் வரும் நீரை தேக்கி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிணறு நீரை உயர்த்தி நீர்மட்டத்தை உயர்த்தியும் பயனடைந்து வருகிறார்கள். ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இந்த பாரம்பரியமிக்க குளத்தில் அவ்வப்போது கரைகளை பலப்படுத்துவதும், தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஆழப்படுத்துவதும் செய்யப்பட்டு வருகிறது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்திலும் இது சேர்க்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த சிலர் குளத்தின் கரை மண்ணை அகற்றிவிட்டார்கள். இதனால் இனி ஓடையில் வரும் மழைநீர் மற்றும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் நீர் வந்தால் விவசாய நிலங்களிலும், ஊருக்குள்ளும் புகும் அபாயம் உள்ளது. எனவே குளத்தின் கரையை உடைத்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினர்.

சாமளாபுரம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பழனிச்சாமி அளித்த மனுவில் ‘‘பி.ஏ.பி. வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் பி.ஏ.பி. மெயின் வாய்க்கால், கிளை வாய்க்கால்களை சேர்த்து கம்பிவேலி போடுவது, சில இடங்களில் கிளை வாய்க்கால்களை மூடுவிடுவது போன்ற நடவடிக்கைகளும் நடைபெறுகிறது. பி.ஏ.பி. மெயின் வாய்க்கால் கரை பகுதியில் உள்ள மண்ணை அப்புறப்படுத்தி அழித்து விடுவதால் கால்வாய் உடைப்பு ஏற்படுகிறது. எனவே உடைப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சில சர்வே எண்ணில் பி.ஏ.பி. வாய்க்கால் செல்லும் இடம் உட்பிரிவு செய்யப்படாமலும் உள்ளது. அதனை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டும். சட்டவிரோதமான பாலங்களை நீக்க வேண்டும்’’ என கோரினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு செயலாளர் அப்புசாமி அளித்த மனுவில், ‘‘திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2021-2022 ம் ஆண்டுகளில் பரவலாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் ஏற்பட்டு கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதுபோல் பெரியம்மை நோயால் தாக்கப்பட்டு கால்நடைகள் பலியாகின. உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்தாததன் காரணமாக தான் கால்நடைகள் பல பலியாகி விட்டன. எனவே கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்றுகளில் இருந்து காப்பாற்ற கால்நடைகளுக்கு உரிய முறையில் தடுப்பூசி செலுத்த வேண்டும்’’ என கூறியுள்ளார்.

ஊத்துக்குளி பாரதிநகரை சேர்ந்த கருப்புசாமி அளித்த மனுவில், ‘‘ எனது தாயாருக்கு பெருந்துறை ஆர்டிஓ மூலம் கடந்த 2000ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஊத்துக்குளி கிராம நிர்வாக ஆவணங்களில் தாக்கல் செய்யப்பட்டு, கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்படவில்லை. தற்போது வாரிசு உரிமைப்படியும், செட்டில்மென்ட் ஆவணப்படியும் நிலமும், வீடும் எனக்கு பாத்தியப்படுகிறது. எனவே எனது பெயரில் பட்டா மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அளித்த மனுவில், ‘‘தென்னம்பாளையம் சந்தையில் நீண்ட காலமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பொது பாதையை ஆக்கிரமித்து கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் உழவர் சந்தை விவசாயிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்படும். இதனால் தன்னிச்சையாக கட்டிய கடைகளை அகற்ற வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளனர். திருப்பூர் ஏறு தழுவுதல் ஜல்லிக்கட்டு பேரவையினர் கொடுத்த மனுவில், ‘‘திருப்பூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் அரசு அறிவுறுத்தலின்படி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும். இன்னும் காலதாமதம் ஏற்படாமல் விரைவாக நடத்த அனுமதி வழங்க வேண்டும்’’ என கோரியுள்ளனர்.

Tags : Uthukuli ,
× RELATED திருப்பூர் மாணவி முதலிடம்