×

உடுமலை, அமராவதி உள்ளிட்ட 4 வனச்சரகங்களில் 300 கிமீ தூரம் தீத்தடுப்பு கோடு அமைப்பு பணி

உடுமலை, பிப்.22:  உடுமலை, அமராவதி உள்ளிட்ட 4 வனச்சரகங்களில் 300 கிமீ தூரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான அரிய வகை மரங்கள், பறவையினங்கள், யானை, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.
இந்நிலையில் ஆண்டுதோறும் கோடை காலங்களில் வனத்தில் புற்கள் காய்ந்து விடுவதால் காட்டுத் தீ பற்றி கொள்வது வழக்கம். குறிப்பாக, மூணாறு சாலையோரம் சுற்றுலா பயணிகள் விட்டுச்செல்லும் பற்ற வைத்த சிகரெட் துண்டுகளாலோ அல்லது சமைப்பதாலோ தீப்பற்றும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும்.

இதையடுத்து இதனை தடுக்கும் வகையில் மூணாறு சாலையின் இருபுறம் மற்றும் வனத்தில் தீப்பற்ற வாய்ப்புள்ள இடங்களில் முன்கூட்டியே வனத்துறை சார்பில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும். அதாவது, குறிப்பிட்ட மீட்டர் அகலத்துக்கு புற்களை வெட்டி அப்புறப்படுத்தி விடுவர். இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தீ பரவுவது கட்டுப்படும். அதன்படி, நடப்பாண்டு சுமார் 300 கிமீ தூரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து, தீத்தடுப்பு கோடுகளை வனப்பகுதியில் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். குறிப்பாக 12 மீட்டர், 6 மீட்டர், 3 மீட்டர் ஆகிய 3 வகையான அகலத்தில் தீத்தடுப்பு கோடுகள் வெட்டப்படுகின்றன. மேலும், கடந்த காலங்களில் அதிகளவு தீப்பற்றிய கீழான் வயல், கருமுட்டி, பூமாலை சுற்று, கூக்கல்பதி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ரேஞ்சர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர், கம்பி சீமார், கவச உடை ஆகியவற்றுடன் தயார் நிலையில் இருப்பார்கள்.

இது தவிர, 17 செட்டில்மென்ட் பகுதியில் உள்ள மலைவாழ் மக்களிடமும் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதியில் பயன்படுத்தக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ஒன்பதாறு செக்போஸ்ட் வழியாக மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகளும் சாலையோரத்தில் சமைக்க கூடாது எனவும், பற்ற வைத்த சிகரெட் துண்டுகளை வீசியெறிய கூடாது எனவும் சுற்றுலா பயணிகளிடம் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்து அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags : Udumalai ,Amaravati ,
× RELATED உடுமலை நகராட்சி கூட்டத்தில் உபரி பட்ஜெட் தாக்கல்