×

அரசு மருத்துவமனையை ஒட்டிய பனகல் சாலையில் சிக்கி தவிக்கும் வாகனங்கள் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு

மதுரை: வாகன நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்கும் விதமாக மதுரை அரசு மருத்துவமனையை ஒட்டிய கோரிப்பாளையம் பனகல் சாலையில் நெரிசலை போக்கும் வகையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். மதுரை மட்டுமின்றி தென் மாவட்ட மக்களின் உயர் சிகிச்சை மையமாக மதுரை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளியாகவும், 1500க்கும் அதிகமானோர் உள்நோயாளியாகவும் சிகிச்சை பெறுகின்றனர். 1842ல் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இம்மருத்துவமனை 1940ல் தென் மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் மதுரை எர்ஸ்கின் மருத்துவமனையாக பெரிய அளவில் உருவெடுத்தது. அப்போதைய சென்னை கவர்னர் எர்ஸ்கின் பெயரில் இம்மருத்துவமனை அழைக்கப்பட்டது. பிறகு 1980ல் பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகளுடன் மதுரை அரசு மருத்துவமனையாக மாறியது. மதுரை நகரின் முக்கிய சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள இம்மருத்துவமனை காலச்சூழலில் இடமாற்றம் செய்யப்படாமல் இயங்கி வந்தது. இதனால் தென்மாவட்ட நோயாளிகள் என அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மதுரை அரசு மருத்துவமனை போதிய இடவசதியின்றி திணறியது.

இதைதொடர்ந்து மருத்துவமனையின் சில பிரிவுகள் அண்ணா பஸ் ஸ்டாண்ட் பகுதியில் டிசிசி மற்றும் எஸ்எஸ்பி பிளாக் புதிய கட்டிடங்களில் இடம் மாற்றப்பட்டு செயல்படுகிறது. எனினும் இடம், வாகன நெருக்கடி பிரச்னையை சமாளிக்க தமிழ்நாடு அரசின் மேம்பாட்டு நடவடிக்கையாக பிரமாண்ட டவர்பிளாக் கட்டிடம் மற்றும் அண்ணா பஸ் ஸ்டாண்ட் எதிரேவுள்ள இடத்தில் குழந்தைகள் நலத்துறை திட்டப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மேலும் வாகன நெருக்கடியை சமாளிக்க நோயாளிகளின் வாகனங்களை தவிர அவர்களது உறவினர்களின் வாகனங்கள் மருத்துவமனையில் நிறுத்த தடை செய்யப்பட்டது. இதனால் ஓரளவு வாகன நெரிசல் குறைந்தது. கோரிப்பாளையம்-பனகல் சாலையில் ஏற்படும் கனரக வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகன நெரிசலை தவிர்த்து மருத்துவமனை ஆம்புலன்ஸ் உள்ளிட்ட நோயாளிகள் வாகனங்கள் மருத்துவமனையில் எளிதாக வந்து செல்லும் வகையில் கோரிப்பாளையம்- பனகல் சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும். மேலும் கலெக்டர் அலுவலகம் முதல் கோரிப்பாளையம் வரை செல்லும் வாகனங்களை வைகையின் வடகரை பகுதியில் போடப்பட்டுள்ள புதிய சாலைகள் வழியாக மாற்றி விடவும், அவ்வாறு வாகனங்கள் இயக்கப்பட்டால், மருத்துவமனை சாலையில் போக்குவரத்து நெருக்கடி இருக்காது. பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வைகை ஆற்றை ஒட்டி உள்ள சாலை வழியாக எளிதாகச் சென்று விடலாம்.கலெக்டர் அலுவலக பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டும் ஒருவழிப்பாதையை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்த போக்குவரத்து போலீசாருக்கு, மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரைத்தது. இதுகுறித்து போலீசார் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும்போது, \”கோரிப்பாளையம் பனகல் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து வாகனநெருக்கடி உள்ள பகுதியாக உள்ளது. விபத்துக்களும் அவ்வப்போது நடக்கிறது. ஷேர் ஆட்டோக்கள் ஒழுங்குமுறை இல்லாமல் அவர்களுக்கான பயணிகள் போட்டியில் மற்ற வாகன ஓட்டிகளும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ அவசர வாகனங்களும் சிக்கி கொள்கின்றன. இதனால் கோரிப்பாளையம் பனகல் சாலையை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும். வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமமின்றி செல்வர். அதனால் தென்மண்டல சிகிச்சை மையமான மதுரை அரசு மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது’’ என்றனர். போலீசார் தரப்பில் கூறும்போது, ‘‘பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். விதி மீறும் ஷேர் ஆட்டோக்கள், ஆக்கிரமிப்புகள் போன்றவற்றின் மீது தனிக்கவனம் காட்டப்படும். மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்களுடன், எளிதாக நோயாளிகள் உள்ளிட்டோர் வந்து செல்ல வசதியாகவும், நகரின் முக்கிய இப்பகுதியில் நெரிசல் ஏற்படாதவாறும் நடவடிக்கை மேற்கொள்ளவும் பலதரப்பட்ட ஆய்வுகள் காவல் துறையால் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இந்த சாலையில் நெரிசல் போக்கும் நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.

Tags : Panagal road ,
× RELATED விவசாயிகள் மகிழ்ச்சி திருவாரூர்...