×

உலகத் தமிழ்ச் சங்கத்தில் அயலகத் தமிழ் புத்தகப் பூங்கா திறப்பு

மதுரை: மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் அயலகத் தமிழ் புத்தக பூங்கா திறக்கப்பட்டது. ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழக அறக்கட்டளையின் சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா சிறப்புக் கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதையொட்டி மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அயலகத் தமிழர்களின் படைப்புகளைக் கொண்ட சிறப்புப் பிரிவான அயலகத் தமிழ் புத்தகப் பூங்கா திறக்கப்பட்டது. புத்தகப் பூங்காவை ஐகோர்ட் மதுரை கிளை வக்கீல் சாமிதுரை மற்றும் உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் அன்புச்செழியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அன்புச்செழியன் பேசுகையில், 1952ம் ஆண்டு இந்திமொழி திணிக்கப்பட்டபோது வங்கமொழி பேசும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். அதில் 5 மாணவர்கள் இறந்தனர். அவர்களின் நினைவாக பிப்.21 ல் உலகத் தாய்மொழி நாளாக யுனெஸ்கோ அறிவித்தது. தாய்மையின் மகத்துவத்தை எப்படிப் போற்றுகிறோமோ அது போல நமது தாய்மொழியையும் போற்றவேண்டும் என்றார். ஆஸ்திரேலியத் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழக தலைவர் அனகன்பாபு, இணையவழியில் கருத்தரங்கத்தில் பேசினார். வக்கீல் சாமிதுரை, தொல்தமிழ் என்ற தலைப்பில் பேசுகையில், கி.பி.7ம் நூற்றாண்டு முதல் தான் உலக மொழிகளின் வரலாறு துவங்குகிறது. ஆனால் நமது தமிழ்மொழியில் கி.மு.3ம் நூற்றாண்டிலேயே தொல்காப்பியம் தோன்றியது. இது தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் என்றார். கவிஞர் மு.செல்லா, சாமானியர்கள் பங்களிப்பும் தமிழ் உயிர்ப்பும் என்ற தலைப்பில் பேசினார். உலகத் தமிழ்ச் சங்க ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார்.

Tags : Neighborhood Tamil Book Park ,World Tamil Society ,
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: திருச்சி...