சின்னாளபட்டி: தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், நடுநிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி மறைந்த பேராசிரியர் அன்பழகனை போற்றும் வகையில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் அறிவித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட தாதன்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.31 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில்புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி அன்பரசு தலைமை வகிக்க, துணை தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். ஒன்றிய தலைவர் சிவகுருசாமி பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். இதில் பள்ளி தலைமையாசிரியை ஷீலா, உதவி தலைமையாசிரியர் ஆனந்தன், ஒன்றிய குழு உறுப்பினர் அமுதவள்ளி ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலக அலுவலர் வடிவேல் முருகன், கிளை செயலாளர் ஈஸ்வரன், ஒப்பந்தகாரர் கந்தசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.