×

பழநி கோயிலுக்கு கேரள பக்தர்கள் வருகை அதிகரிப்பு பறவை காவடி எடுத்து பரவசம்

பழநி: பழநி கோயிலுக்கு கேரள பக்தர்கள் வருகை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூச திருவிழாவின் காரணமாக கடந்த 2 மாதங்களாக பழநி கோயிலுக்கு தமிழக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. பழநி கோயிலில் கும்பாபிஷேகம் முடிவடைந்து தற்போது மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது பழநி கோயிலுக்கு கேரள மாநில பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.


நேற்று கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மறையூரை சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து அலகு குத்தியும், கலச காவடி எடுத்தும் வழிபாடு செய்தனர். தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் வகையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பழநிக்கு தைப்பூச திருவிழா முடிவடைந்ததும் குழுவாக வந்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றி வழிபாடு செய்வதாக மறையூர் பக்தர்கள் தெரிவித்தனர். கிரிவீதி சாலையில் அலகு குத்தி, பறவை காவடி எடுத்து கேரள பக்தர்கள் ஆடிப்பாடியபடி வந்தது காண்போரை பரவசமடையச் செய்தது.

Tags : Kerala ,Palani temple ,
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...