×

சாரண, சாரணீயர் இயக்கத்தை போற்றுவோம்

திருத்துறைப்பூண்டி: உலக அளவில் செயல்படும் ஓர் இளைஞர் இயக்கம் சாரணர் இயக்கமாகும். 22.2.1857ல் லண்டனில் ஹெர்பர்ட் ஜார்ஜ் பேடன் பவல், ஹென்றியாட்டா கிரேஸ் ஸ்மித் பேடன் பவல் ஆகியோருக்கு 8வது குழந்தையாக பிறந்தவர் சர் ராபர்ட் ஸ்டீபன்சன் சுமித் பேடன் பவல். சார்டர் ஹவுஸ் உயர்நிலைப் பள்ளியில் சராசரி மாணவனாக பயின்ற இவர் இயற்கை உற்று நோக்கல், படகு ஓட்டுதல், வேட்டையாடுதல், இரு கைகளிலும் ஓவியம் வரைதல், நட்சத்திரங்களை பார்த்து திசை அறிதல், இசை, பாட்டு, தச்சு வேலைகளில் ஆர்வம் கொண்டிருந்தார். இளம் வயதிலேயே தந்தையாரை இழந்ததால், குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. 19வது வயதில் 1876ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்தார். அந்த காலகட்டங்களில் ஆங்கிலேயர் ராணுவம் பல நாடுகளுடன் போரிட்டு அந்த நாடுகளை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்தன. அவ்வாறாக 1887ல் தென் ஆப்பிரிக்காவில் ஜூலு பழங்குடியின மக்கள் ஆங்கிலேயரை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர் அங்கு பணியமர்த்தப்பட்ட பேடன் பவல் அதன் தலைவர் டினி சூலுவை கைது செய்து போரினை முடிவுக்கு கொண்டு வந்தார்.


பின்பு 1895ம் ஆண்டு ஆஷாந்தி பழங்குடியினருடன் போர் செய்து வென்ற பின் அதன் தலைவர் பிராம்பே இடது கை குலுக்கினான், அதுவே பிற்காலத்தில் சாரண இயக்கத்தில் சகோதரத்துவத்தை உணர்த்துவதற்காக சேர்க்கப்பட்டது. 1896ல் மெட்டாபிலேன்ட் பகுதியில் ரொடிசியா பழங்குடி மக்கள் பேடன் பவலுக்கு இம் பிசா அதாவது ஒரு போதும் உறங்காத ஓநாய் என்று பெயரிட்டு அழைத்தார்கள். 13.10.1899 முதல் 18.05.1900 வரை 217 நாட்கள் மேப்கிங் பகுதியில் போயர்களுடன் போர் நடத்தி வெற்றி பெற்றார். குறைவான வீரர்களைக் கொண்டு வெற்றி பெறுவதற்கு சீருடையுடன் பயிற்சி பெற்ற சிறுவர்களை பயன்படுத்தி அவர்களின் துணிச்சலையும், இரவு நேரத்தில் பணி செய்வதையும் அறிந்து சிறுவர்களுக்கான இயக்கம் ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் சாரணியத்திற்கு உறுதுணை என்னும் புத்தகத்தினை வெளியிட்டார்.1907ம் ஆண்டு முதன் முதலாக பிரவுன்சி தீவில் 20 சாரணர்களை கொண்டு முகாமினை நடத்தினார். அன்று முதல் சாரணர் இயக்கம் உலகம் முழுவதும் 216 நாடுகளில் சுமார் 45 மில்லியன் சாரண சாரணியர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 1908ம் ஆண்டு சிறுவர் சாரணியம் என்னும் புத்தகத்தை வெளியிட்டார். இங்கிலாந்து மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அந்த புத்தகத்தை ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தனர். 1910ம் ஆண்டு கடல் சாரணர் பிரிவும், முதல் சாரணிய படைப்பிரிவும் தொடங்கப்பட்டது. 1916ம் ஆண்டு குருளையர் படை, 1918ம் ஆண்டு திரி சாரணர் படை போன்றவை உருவாக்கப்பட்டன. இந்தியாவில் சாரண இயக்கமானது 1909ம் ஆண்டு உருவாக்கப்பட்டாலும் அதில் ஆங்கிலேயே இந்திய சிறுவர்கள் மட்டுமே பங்கேற்றார்கள். இந்திய சிறுவர்களுக்காக 1911ம் ஆண்டு டாக்டர் குல்லனால் சாரண இயக்கம் தொடங்கப்பட்டது.


1916ம் ஆண்டு டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் டாக்டர் அருண்டேல் உதவியுடன் முதல் சிறுவர் சாரண இயக்கத்தினை சென்னையில் துவங்கினார். 1917ம் ஆண்டு பண்டிட் மதன் மோகன் மாளவியா, பண்டிட் இருதயநாத் குன்ஸ்ரூ, பண்டிட் ராம் பாஜ்பாய் ஆகியோர் அலகாபாத்தில் சேவா சமிதி சாரண சங்கத்தை ஆரம்பித்தனர். 1922ம் ஆண்டு ஆங்கில இந்திய சிறுவர் சாரண சங்கங்கள் இணைக்கப்பட்டன. 1938ம் ஆண்டு ஹிந்துஸ்தான் சாரணர் இயக்கம் பண்டிட் மதன் மோகன் மாளவியா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. 1947ம் ஆண்டு இந்திய சிறுவர் சாரண சங்கம், சேவா சமிதிசாரண சங்கம் அனைத்து சாரண சங்கங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டன. 1950ம் ஆண்டில் பாரத சாரண சாரணியம் உருவாக்கப்பட்டது 1951 ஆம் ஆண்டு அனைத்து சாரண இயக்கங்களும் ஒன்றிணைந்து பாரத சாரண சாரணிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. உலகத்தில் எத்தனையோ விதமான சங்கங்களும் இயக்கங்களும் இயங்கி வந்தாலும் மூன்று வயது குழந்தை பருவத்தில் உள்ள மாணவர்கள் முதல் 25 வயது வரை உள்ளவர்கள் வரை ஒழுங்கு கட்டுப்பாடு, கீழ்ப்படிதல், பெற்றோரை மதித்தல், பெரியோரை மதித்தல், நாட்டுப் பற்று, பிறரை சகோதரர்களாக நேசிக்கும் பண்பு, இயற்கையை நேசித்தல், விலங்குகளிடம் அன்பு காட்டுதல், பொதுவுடமையை பாதுகாப்பவர், எண்ணம், வாக்கு, செயல்களில் தூய்மை உள்ளவர்களாக மாற்றுதல் ஆகியவற்றை வளர்க்கக் கூடியதாக இயக்கமாக செயல்படுகிறது.


தற்போது இப்பிரிவானது குருளையர், சாரணர், திரி சாரணர் ஆகியவை மாணவர்களுக்கும், நீலப் பறவையர், சாரணியர், திரி சாரணியர் மாணவியருக்கும் பொருத்தமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இயக்கத்தின் குறிக்கோளாக முடிந்ததை செய், தயாராயிரு, சேவை என்ற நிலைகளில் உடல் வலிமையாலும், மன எழுச்சியாலும், நேர்மையான எண்ணங்களாலும் தயாராக இருக்க வேண்டும். இந்த அமைப்பில் பல்வேறு வகையான பயிற்சிகள் குறிப்பாக கயிறுகளைக் கொண்டு கட்டு கட்டும் முறைகள், திசைகாட்டிகள் கொண்டு திசையறியும் முறைகள், கூடாரம் அமைத்தல், தட்டிகள் அமைத்தல், நட்சத்திரங்களைக் கொண்டு திசை அறிதல், நிலப்படம் வரைவதற்கான வழிமுறைகள், நிலப்படத்தினை அமைக்கும் வழிமுறைகள், ஆற்றுப்படை குறிகள், பல்வேறு வகையான முடிச்சுகள், மரபு குறியீடுகள், தல படங்கள் உருவாக்குதல், ஊக்க ஒலிகள், பாத்திரம் இல்லா சமையல் முறைகள், நெருப்பில்லா சமையல் முறைகள், தீயின் வகைகள் மற்றும் அவற்றை அணைக்கும் வழிமுறைகள், முதலுதவி, முதலுதவியின் நோக்கம் அடிபட்டவரை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு தூக்கிச் செல்லும் வழிமுறைகள், சுளுக்கு, பூச்சி கொட்டுதல், சுட்ட அல்லது வெந்தப்புண், அதிர்ச்சி, மூச்சுத் திணறல், எலும்பு முறிவு போன்றவற்றிற்கான உதவிகள் உடற்பயிற்சிகள் பல்வேறு வகைகள் மூலம் நீளம் கண்டறிதல், உயரம் கண்டறிதல், சைகைகள் மூலம் தகவல் அனுப்புதல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயா, மாவட்ட கல்வி அலுவலர்கள் மாதவன் (இடைநிலை) மாயகிருஷ்ணன் (தனியார் பள்ளிகள்) சௌந்தரராஜன் (தொடக்க கல்வி) உள்ளிட்டோரின் அறிவுறுத்துதலின்படி அனைத்து பள்ளிகளிலும் இந்த இயக்கமானது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இயக்கத்தை தோற்றுவித்த சர் ராபர்ட் ஸ்டீபன்சன் ஸ்மித் பேடன் பவல்(166 வது பிறந்தநாள்), சாரணியர் இயக்கத்தை தலைமையேற்று நடத்திய ஓலேவ் செயின்ட் கிளார்க் ஜோம்ஸ் (134வது பிறந்தநாள்) ஆகியோரின் பிறந்த தினமான இன்று உலக சிந்தனை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Tags : Sarana ,Scout movement ,
× RELATED பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி