புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் உளுந்து சாகுபடி தொழில்நுட்பத்தால் நிறைந்த மகசூலில் அதிக லாபம் பெறலாம்

புதுக்கோட்டை, பிப்.22: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்து குறைவான நீரில் நிறைவான மகசூல் எடுத்து லாபம் பெறலாம் எனவும் நுண்ணீர்ப் பாசனம் அமைத்து நீர் சிக்கனத்தை கடைப்பிடித்து கூடுதல் பரப்பில் பயறு சாகுபடி மேற்கொண்டு உணவு உற்பத்தியினை அதிகரிக்க விவசாயிகள் முன்வர வேண்டும் எனவும் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நெல் சாகுபடிக்குபின் பயறு சாகுபடி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு உளுந்து விதைகள் ஏக்கருக்கு ரூ.400 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, சாகுபடி செய்ய வம்பன் 8 மற்றும் வம்பன் 10 சிறந்த ரகங்கள் ஆகும். மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உளுந்து விதைகள் 34.965 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது சம்பா நெல் சாகுபடி அறுவடை முடிந்துள்ளது.

ஆகையால் நெல் அறுவடைக்குப் பின்னர் உளுந்து சாகுபடி செய்திட உகந்த பருவமாகும். மிகக்குறைவான வயதுடைய பயறுவகை பயிரான உளுந்து 65, 70 நாட்களில் பலன் தரக்கூடியது. ஏக்கருக்கு 300 கிலோ மகசூல் பெறலாம். உளுந்து சாகுபடிக்குத் தேவையான நீரின் அளவும் மிக குறைவு, அதாவது 350 மி.மீ போதுமானது. நுண்ணீர் பாசன முறையில் தெளிப்புநீர்ப் பாசனம் அமைத்து நீர் சிக்கனத்தை கடைப்பிடித்து கூடுதல் பரப்பில் சாகுபடி தொழில் நுட்பங்களை கடைபிடித்து கூடுதல் பரப்பில் சாகுபடி செய்வதனால் குறைவான நீரில் உணவு உற்பத்தியினை அதிகரிக்கலாம். உளுந்து சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து அதிக மகசூல் பெறலாம். ஏக்கருக்கு நிகர இலாபமாக ரூ.20000 பெறலாம். உளுந்து சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகளுடன் உயிர் உரங்களான ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா தலா ஒரு பொட்டலம் அல்லது திரவ ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா தலா 50 மிலியினை தேவையான ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து வரிசைக்கு வரிசை 30 செ. மீ இடைவெளியும் செடிக்கு செடி 10 செ. மீ இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும். சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் மகசூலுக்கு பூக்கும் தருணத்தில் 2 சத டிஏபி கரைசல் அல்லது ஏக்கருக்கு 2 கிலோ பயறு ஒண்டர் நுண்ணூட்டம் 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். அது மட்டுமல்லாமல் உளுந்துப் பயிரானது விண்ணில் உள்ள தழைச்சத்தினை வேர் முடிச்சுகளில் சேமிக்கின்றது. இதனால் மண்வளம் மேம்படுகிறது. இது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பயிர்களுக்கு நல்ல பலனை கொடுக்கிறது. உளுந்து சாகுபடியில் அறுவடைக்குப் பின் பெறப்படும் உளுந்து செடி கால்நடைகளுக்கு மிக சிறந்த புரத உணவாகும். இதனை சேமித்து வைத்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம். உளுந்து சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் நுண்ணீர் பாசன முறையான மழைத்தூவான் அல்லது தெளிப்பு நீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துவதால் நீர்த் தேவையினைப் பெறுமளவு குறைக்கலாம்.

எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நெல் தரிசில் உளுந்து அல்லது பாசிப்பயறு சாகுபடி செய்து குறைவான நீரில் குறைவான நாட்களில் அதிகப்படியான மகசூல் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வேளாண் இணை இயக்குனர் தகவல் நெல் அறுவடைக்குப் பின்னர் உளுந்து சாகுபடி செய்திட உகந்த பருவமாகும். மிகக்குறைவான வயதுடைய பயறுவகை பயிரான உளுந்து 65, 70 நாட்களில் பலன் தரக்கூடியது. ஏக்கருக்கு 300 கிலோ மகசூல் பெறலாம். உளுந்து சாகுபடிக்குத் தேவையான நீரின் அளவும் மிக குறைவு, அதாவது 350 மி.மீ போதுமானது.

Related Stories: