புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டில் 40 அடி உயரத்தில் பாய்ந்த காளை வீடியோ வைரலால் பரவசம்

புதுக்கோட்டை, பிப்.22: புதுக்கோட்டை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் 40 அடி உயரத்தில் பாய்ந்து சென்ற காளையின் வீடியோ வைரலானதால் பரவசம் ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 19ம்தேதி நடைபெற்றது. இதில் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. 211 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். இதில் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிகட்டு போட்டிக்கு மத்தியில் வாடிவாசலிருந்து வெளியேறிய காளை ஒன்று கூட்டத்துக்குள் புகுந்து அங்கு வரிசையாக நின்றிருந்த கூட்டத்தினரை பார்த்தது. உடனடியாக பின்னோக்கி சென்ற காளை, கூட்டத்திற்குள் இருக்கும் பார்வையாளர்களை எந்தவித தொந்தரவும் செய்யாமல் ஒரே ஜம்பாக சுமார் 40 அடிக்கு உயரத்திற்கு மேலாக தாவி சென்றது. இந்தநிகழ்ச்சி அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அனைவரையும் பரவசமடைய செய்துள்ளது.

Related Stories: