×

ராசிபுரம் நகராட்சியில் ₹4.36 கோடியில் புதிய குடிநீர் திட்டம் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சியில் ₹4.36 கோடியில் தினமும் குடிநீர் வழங்கும் வகையில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மக்களுக்கு எடப்பாடி- ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ராசிபுரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ள நெடுங்குளம் பகுதியில் இருந்து காவிரி குடிநீர் கொண்டு வரப்படுகிறது. நகரில் உள்ள 5 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளில் நீரேற்றம் செய்யப்பட்டு வாரம் ஒரு முறை, நகரில் உள்ள அனைத்து குடிநீர் இணைப்புளுக்கும் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது நகரில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக இணைப்புளுக்கு 5 நாட்களுக்கு ஒருமுறை 2 மணிநேரம் குடிநீர் வழங்கப்படுகிறது. வளர்ந்து வரும் ராசிபுரம் நகருக்கு தற்போது நடைமுறையில் உள்ள ஒரு குடிநீர் திட்டம் போதுமானதாக இல்லை.

கடந்த 10 ஆண்டுகளில் ராசிபுரம் நகரம் வளர்ச்சி அடைந்துள்ளது. புதிய நகரங்கள், குடியிருப்புகள் தோன்றியுள்ளது. மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தினமும் குடிநீர் வழங்கும் வகையில், புதிய திட்டம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து ராசிபுரம் நகர்மன்ற தலைவர் கவிதாசங்கர் கூறியதாவது: ராசிபுரம் நகருக்கு குடிநீர் கொண்டு வரும் குழாய் அடிக்கடி வெடிக்கிறது. தொடர்ந்து குடிநீர் குழாய் பழுதடைவதால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. தற்போது குடிநீர் கொண்டு வரும் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படாமல் இருக்க நவீன தொழில்நுட்ப தானியங்கி முறையில் பழுதுபார்க்கப்படுகிறது. இதனால் ராசிபுரம் நகர மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் கிடைக்கும். ராசிபுரம் நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு தினமும் குடிநீர் வழங்கும் வகையில் ₹4.36 கோடியில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பழைய பேருந்து நிலைய பகுதியில் 50 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தரைமட்ட ராட்சத நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்படும். நகரில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு தடையின்றி தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் வகையில், புதிய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளது. கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கட்டனாச்சம்பட்டி பிளாக், காட்டூர் காட்டுக்கொட்டாய்,  தட்டான்குட்டை சாலை ஆகிய பகுதிகளில் ₹4.68 கோடியிலும், தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கோரைக்காடு, வரதன் தெரு, ரோட்டரி கிளப் சாலை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பகுதிகளில் ₹9.41 கோடியில்  புதிய சாலைகள் அமைக்கப்படும். நகரில் அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே இருக்கும் மின் விளக்குகள் எல்இடி மின் விளக்குகளாக மாற்றியமைக்க அரசு ₹4.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் 1871 பழைய மின் விளக்குகள் எல்இடி மின் விளக்குகளாக மாற்றம் செய்யப்படுகிறது. 863 புதிய மின் கம்பங்கள் பொருத்தப்பட்டு, எல்இடி மின் விளக்குகள் அமைக்கப்படும்.இவ்வாறு நகர்மன்ற தலைவர் கவிதாசங்கர் தெரிவித்தார். அப்போது நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உடனிருந்தார்.


Tags : Rasipuram Municipality ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து