×

கோயிலில் புகுந்து 5 ஐம்பொன் சிலைகள் திருட்டு கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கோயிலில் புகுந்து 5ஐம்பொன் சிலைகள் திருடிய கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை ஆற்றுப்படுகையில் வாசுதேவ கண்ணன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இந்த கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த, ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவு நேரத்தில் கோயிலின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த உற்சவமூர்த்திகளான வாசுதேவ கண்ணன், ராதா, ருக்மணி, ராமானுஜர், சுதர்சன ஆழ்வார் ஆகிய ஒன்றரை அடி உயரம் கொண்ட, ஐந்து ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது. மேலும் சிசிடிவி கேமரா ஹாட் டிஸ்க்கையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த ஊத்தங்கரை போலீஸ் எஸ்ஐக்கள் குட்டியப்பன், அன்பழகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், ஐம்பொன் சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் வெளி மாவட்டங்களுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்பேரில் தனிப்படை போலீசார் பக்கத்து மாவட்டங்களில் முகாமிட்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED காவேரிப்பட்டணத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்