×

வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில் குண்டும் குழியுமான தார் சாலை

வாலாஜாபாத், பிப். 21: வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமான சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், வாலாஜாபாத் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் வாலாஜாபாத் வந்துதான் இங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம், படப்பை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகர்புற பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.

இவை மட்டுமின்றி வாலாஜாபாத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு நாள்தோறும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வாலாஜாபாத் மைய பகுதியில் உள்ள ரவுண்டானா எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இந்த ரவுண்டானா பகுதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு ஆகிய 3 தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வழியாகத்தான் நாள்தோறும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் நாள்தோறும் சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த ரவுண்டானா அருகே காஞ்சிபுரம் சாலை இணைக்கும் பகுதியில் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலை ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 முக்கிய சாலைகளையும் இணைக்கும் பகுதியாக அமைந்துள்ளது. இங்கு காஞ்சிபுரம் சாலை இணைக்கும் பகுதியில் குண்டும், குழியங்களாகவும் போக்குவரத்திற்கு லாக்கியற்ற சாலையாக மாறி உள்ளன. இதனால், இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்வதால் காலையும், மாலையும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றன.

 குறிப்பாக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்களும் இந்த குண்டும், குழியுமாக உள்ள பகுதிகளில் ஊர்ந்துதான் செல்கின்றன.  இது குறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறையிடம் தெரிவித்தும், இதுவரை நெடுஞ்சாலைத்துறை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, மக்கள் நலன்கருதி போக்குவரத்து நெரிசல்  ஏற்படும் இந்த ரவுண்டானா பகுதியில்  சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பேருந்து நிலையம் அருகாமையில் தார்சாலை மேடும், பள்ளமாக உள்ளன. இதனை சமன்படுத்தி புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பகுதி  மக்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, மாவட்ட நெடுஞ்சாலைத்துறை இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சாலை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி வாகன ஓட்டிகள்  வலியுறுத்துகின்றனர்.

Tags : Walajahabad Roundabout ,
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள்...