×

எஸ்பி அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கடலூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் கணவன், மனைவி சரண்

கடலூர், பிப். 21: கடலூர் எஸ்பி அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய, கணவன்- மனைவி கடலூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு கடந்த 15ம் தேதி மனு அளிக்க ஒரு பெண் வந்திருந்தார். அப்போது திடீரென அவர் மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டார். இதை பார்த்த பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மண்ணெண்ணை பாட்டிலை பறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திட்டக்குடியை சேர்ந்த கவியரசன் மனைவி தமிழ்ச்செல்வி (28) என்பதும், கவியரசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதும், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதும், தமிழ்ச்செல்வி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த நபர்கள் அவர் வெளியில் செல்லும்போதும், வரும்போதும் திட்டி தாக்கியுள்ளதும் தெரிந்தது.

இதுகுறித்து அவர் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் பிறகும் அடிக்கடி தமிழ்ச்செல்வியை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மீண்டும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தமிழ்ச்செல்வி கடலூர் எஸ்பி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய தமிழ்ச்செல்வியின் பக்கத்து வீட்டுக்காரர்களான கொளஞ்சிநாதன் (47), இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (37) ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.  இந்நிலையில் கொளஞ்சிநாதனும், தமிழ்செல்வியும் நேற்று கடலூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி உத்தமராஜா, இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் இரண்டு பேரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வனராசு ஆஜரானார்.

Tags : SP ,Saran ,Cuddalore Prevention of Atrocities Court ,
× RELATED ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை