வாணியம்பாடி பாலாற்றில் நேரடியாக கழிவுநீரை வெளியேற்றிய தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிப்பு : கலெக்டர் அதிரடி உத்தரவு

வாணியம்பாடி, பிப்.21: வாணியம்பாடி பாலாற்றில் நேரடியாக கழிவுநீரை வெளியேற்றி தோல் பதனிடும் தொழிற்சாலையின் மின்இணைப்பு துண்டிக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அதிரடியாக உத்தரவிட்டார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியையொட்டி ஏராளமான தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரானது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, கழிவுநீக்கம் செய்யப்பட்டு பின்னர் மறுசுழற்சி செய்யப்படும்.

இந்நிலையில், சில தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல், நேரடியாக பாலாற்றில் கலக்கவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, கடந்த 16ம் தேதி இரவு கச்சேரி சாலை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோல் பதனிடம் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக பாலாற்றில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டபோது நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக அதனை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் அறிக்கை சமர்ப்பித்த மாசு கட்டுப்பாட்ட வாரிய அதிகாரிகள், அந்த தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலையை மூடி, மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் கலெக்டர், அந்த தோல் பதனிடும் தொழிற்சாலையின் மின்இணைப்பை துண்டிக்க நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், கலெக்டர் தெரிவிக்கையில், தோல் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் நிலத்திலோ, நீரிலோ நேரடியாக வெளியேற்றப்படுவது கண்டறியப்பட்டால், அந்த நிறுவனங்களை மூடி சீல் வைத்தும், மின்இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: