அரூர், பிப்.21: பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதியில் உள்ள 5,108 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், அரூர் வரட்டாறு அணையில் இருந்து, கலெக்டர் சாந்தி பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து 40 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது.
தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமம், வரட்டாறு அணையில் இருந்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 25 ஏரிகளுக்கு, தொடர்ந்து 20 நாட்களுக்கு விநாடிக்கு 30 கனஅடி வீதம் 51.840 மில்லியன் கனஅடி தண்ணீரும், புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள நேரடி பாசனத்திற்கு, 20 நாட்களுக்கு விநாடிக்கு 30 கனஅடி வீதம் 51.840 மில்லியன் கனஅடி தண்ணீர் என மொத்தம் 40 நாட்களுக்கு, 5,108 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், 103.68 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.