மார்பக புற்றுநோயில் இருந்து பாதுகாத்து கொள்ளும் முறைகள் : திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர் விளக்கம்

திருச்சி,பிப்.21: இந்தியாவில் மார்பக புற்று நோய் கடந்த 5 ஆண்டுகளில், 4 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப் படுகின்றனர். இந்த புற்றுநோய் விகிதம் என்பது இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 12 சதவீதம் அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது முதல் இடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய், 2வது இடத்தில் கர்ப்பபை வாய் புற்றுநோய், 3வது நுரையீரல் புற்றுநோய் உள்ளது.

இந்த புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் அதை வராமல் தடுக்க அடிப்படையாக செய்ய வேண்டிய சில வழிமுறைகளை நம்முடைய வாழ்நாளில் கடைபிடிக்கும் பழக்கவழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை துறையின் தலைவரும், மருத்துவருமான சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: புற்றுநோய்களில் முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய் தான், அதிலும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பெல்லாம், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே அதிகம் பாதித்த இந்த மார்பக புற்றுநோய் இன்று 30 வயது முதல் 40 வயதுள்ள பெண்களை அதிகளவில் பாதிக்கிறது. அன்று இந்த வயதில் புற்றுநோய் பாதிப்பானது 2 சதவீதம் இருந்தது, இன்று 30 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இந்த மார்பக புற்றுநோயை கண்டறிய மேமோகிராம் போன்ற தொழில்நுட்பங்கள் இருந்தாலும், அவைகள் 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மட்டுமே கண்டறியும் அளவில் உள்ளது. அதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் உள்ள பெண்களின் மார்பகங்கள் மிகவும் இருக்கமானதாக உள்ளது. ஆனால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள பெண்களின் மார்பகங்கள் மிகவும் மிருதுவாக இருப்பதால், மார்பகங்களில் உள்ள கட்டிகளை மிக சுலபமாக இந்த கருவிகளை கொண்டு கண்டறிய முடியும்.

ஆனால் இந்தியாவில் உள்ள பெண்களின் மார்பகங்கள் இருக்கமானவை என்பதால், தொழில்நுட்பங்களும் கைக்கொடுப்பதில்லை. அதே சமயம் புற்றுநோயின் வீரியமும் இந்திய பெண்களிடம் அதிகம் காணப்படும். எனவே தான் அது முற்றிய நிலையில் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுகின்றனர். எனவே பெண்கள் வயதிற்கு வந்த உடன் தங்களுடைய மார்பகங்களை சுயமாக அழுத்தி பார்த்து சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதில் கூச்சப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அதேபோல் பெண்களுக்கான மாதவிடாய் தொடங்கி முடியும் நாளில் இருந்து 7 நாட்களுக்கு பிறகு சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

ஒருவேளை சுயமாக அழுத்தி பார்க்கும்போது கட்டிகள் தென்பட்டால் உடனடியாக அறுவைசிகிச்சை மருத்துவர்களை அணுகிட வேண்டும். பலர் சாதாரண பெண் மருத்துவர்களை சென்று பார்ப்பதால், அவர்கள் அதை பால் கட்டி என்று கூறி அனுப்பி விடுவார்கள். எனவே உங்கள் அலட்சியத்தால் புற்றுநோய் பாதிப்பு அதிகமாகும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். இரண்டாவதாக கர்ப்பபைவாய் புற்றுநோய் இந்த புற்றுநோய்க்கு மொத்தம் 4 நிலைகள் உண்டு. அதில் முதல் நிலையில் கண்டறிந்தால் மட்டுமே பெண்களை காப்பாற்ற முடியும். திருமணமாகி 30 வயதை கடந்தபிறகு எதிர்பாராமல் சிறுநீர் கழிக்கும் பகுதியில் இருந்து இரத்தம் கசிந்தால் அது கர்ப்பபை வாய் புற்றுநோயாக இருக்கலாம். எனவே ஒருமுறை மருத்துவரை அணுகி எச்.பி.வி என்ற பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு 6 மாதத்திற்கு இந்த பரிசோதனை செய்து கொண்டால் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். இதற்கு சுய பரிசோதனை செய்துகொள்ள முடியாது. பொதுவாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பெண் குழந்தைகள் வயதுக்கு வருவதற்கு முன்பே அதற்கென தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள அறிவுறுத்துகிறது. அதை அந்த நாட்டு அரசாங்கங்கள் கட்டாயமாக்கி உள்ளது.

இந்த வகையான தடுப்பூசியை ஆண் குழந்தைகளாக இருந்தால் 12 வயதிலேயே செலுத்தி கொள்கின்றனர். அதேபோல் பெண் குழந்தைகளாக இருந்தால் 8 முதல் 10 வயதிற்குள் இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்கின்றனர். இந்த தடுப்பூசிகள் 3 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. அதில் முதல் தவணைக்கு பிறகு, இரண்டாவது தவணை 1 மாதம் முடிவில் செலுத்த வேண்டும். மூன்றவாது தவணை 6 மாத முடிவில் செலுத்திக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் 80 சதவீதம் புற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இந்தியாவில் 80 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் அதில் நிறைய பேருக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டதே தெரியாமல் உள்ளனர். இந்தியாவில் தற்போது இதற்கான மருந்துகள் தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கிறது. கார்டசில் -9 என்ற இந்த ரக மருந்து 8 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் புற்றுநோய் என்பது ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ வருவதற்கு இது தான் காரணம் என்பது இல்லை. ஒவ்வொரு மனிதனுடைய உடம்பிலும் 2 மரபணுக்கள் உள்ளது. அதில் ஒரு மரபணு வலுவிலக்கும்போது, மனிதனுடைய தவறான பழக்கவழக்கங்களால் 2வது மரபணும் செயலிழந்து புற்றுநோய் பாதிப்பு ஏற்படும். அதில் ஆண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் நிச்சயம் உயிரிழந்து விடுவார்கள். அதற்கு காரணம் மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்றவற்றால் அந்த மரபணுக்கள் இரண்டுமே செயலிழந்து புற்றுநோய் வீரியம் அதிகரித்து உயிரிழப்பை ஏற்படுத்தும். இதில் அடுத்தடுத்து உள்ள நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய், பெருங்குடல், சிறுகுடல் புற்றுநோய்கள் என்று எது வந்தாலும் உயிரிழப்பு என்பது கட்டாயம் ஏற்படும். இதற்கு மருந்து மாத்திரைகள் என்பது தீர்வு கிடையாது. எனவே புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிவது தான் ஒரே வழி, என்பதை பொதுமக்கள் இந்த நோயின் பாதிப்பை புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: