புதுக்கோட்டையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை, பிப்.21: புதுக்கோட்டையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 335 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.

இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார். மேலும் மாவட்ட தாட்கோ அலுவலகம் சார்பில், ஒரு பயனாளிக்கு ரூ.6000 மதிப்பிலான மகப்பேறு உதவித்தொகை மற்றும் ஒரு பயனாளிக்கு தூய்மைப் பணியாளர் நலவாரிய அட்டையினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்

பொன்னமராவதி,பிப்.21:  பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் ஏனாதி.ராசு, சிபிஐ மாவட்ட பொருளாளர் ஜீவானந்தம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும். பொன்னமராவதி திருமேனிக்கண்மாயில் படர்ந்திருக்கும் குழி தாமரைகளை அப்புறப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழி செய்யவேண்டும். பொன்னமராவதி ஒன்றியத்தில் சேதமடைந்து காணப்படும் சாலைகள் சீரமைக்க வேண்டும். பொன்னமராவதி அமரகண்டான் ஊரணியில் நடைபாதை அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்பட வேண்டும். பொன்னமராவதியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி காரையூர் காவல் நிலையத்தை மீண்டும் பொன்னமராவதி டிஎஸ்பி அலுவலகத்தின் கீழ் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கருணாமூர்த்தி, ராசு, கே.ராசு, பழனிச்சாமி, பஞ்சவர்ணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: