×

உடன்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவால் சீனி கருப்புக்கட்டியில் பூஞ்சை வளரும் அவலம் உற்பத்தியாளர்கள் கவலை

உடன்குடி, பிப். 21: உடன்குடி பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் சீனி கருப்புக்கட்டியில் பூஞ்சைகள் வளர்ந்தும், கசிந்தும் வருவதால் உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின் தென்கோடியில் உடன்குடி பகுதியில் காணும் இடமெங்கும் கற்பகத்தருவான பனைமரங்களே நிறைந்துள்ளன. தமிழ்நாடு மாநிலத்தின் மரமாக திகழும் இந்த பனைமரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீருக்கும், அதில் இருந்து தயாரிக்கப்படும் கருப்புக்கட்டிக்கும் தனி மவுசு உண்டு.

தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கூட பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை உடன்குடி கருப்பட்டி இங்கு கிடைக்கும் என போர்டு வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது, இதன் தனிச்சிறப்பாகும். பண்டைய காலத்தில் பண்டமாற்று முறையில் வர்த்தகம் நடந்தபோது உடன்குடி பகுதியில் இருந்து கருப்புக்கட்டி குலசேகரன்பட்டினம் இயற்கை துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி அதிகளவில் நடந்து வந்தது. ஆண்டில் சுமார் 5 மாதங்கள் மட்டுமே பதநீர் சீசன் என்பதால் அப்போது மட்டுமே மருத்துவக்குணம் நிறைந்த கருப்புக்கட்டி, கற்கண்டுகள் தயாரிப்பது வழக்கம். ஒவ்வொரு தொழிலும் ஒரிஜினலுக்கு ஏற்றார்போல் மாற்றுப் பொருட்கள் தயாரிக்கப்படும். அந்தவகையில் கருப்புக்கட்டியும் சீனி கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக உடன்குடி பகுதியில் காட்டுப்பகுதி, தோட்டங்களுக்குள் ஆங்காங்கே பனை ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு தினமும் சீனி கலந்த கருப்புக்கட்டி, கற்கண்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக உற்பத்தி செய்யப்படும் கருப்புக்கட்டிகளை மொத்த, சில்லறை வியாபாரிகள் தங்கள் வீடு, குடோன்களில் அமைக்கப்பட்டிருக்கும் பரண்களில் வைத்து பாதுகாப்பர். அவ்வாறு பரண்களில் போட்டு வைக்கப்பட்டிருக்கும் கருப்புக்கட்டிக்கு கீழிலிருந்து புகை போடப்படும். அதன் மூலம் கருப்பட்டி நல்ல திடமாக இறுகி காணப்படும்.

ஆனால் தற்போது உடன்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், இருப்பு வைத்த கருப்புக்கட்டியில் வெள்ளை நிறத்தில் நூல் போன்ற பூஞ்சை படிந்து வருகின்றன. மேலும் கருப்பட்டியானது கசிந்து தண்ணீராக வெளிவருகிறது. இதனால்  உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.  இதுகுறித்து கருப்புக்கட்டி வியாபாரிகள் கூறுகையில், ‘‘கருப்புக்கட்டிக்கு விலை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பு வைத்திருந்தோம். சரி வர மழை பெய்யாத நிலையில் தற்போது இரவில் துவங்கும் பனிப்பொழிவு பகல் வரை அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுவாக மழை பெய்தால் கூட கருப்பு கட்டிக்கு பாதிப்பு அதிகம் இருக்காது. ஆனால் தற்போது பனிப்பொழிவின் காரணமாக கருப்பு கட்டியிலும் பூஞ்சை பிடிக்கிறது. புகைபோட்டால் அதையும் மீறி பூஞ்சை பிடிக்கிறது. மேலும் கருப்புக்கட்டி மிக மிக கருப்பாக இருந்தால் வாடிக்கையாளர்கள் வாங்க மறுக்கின்றனர். இதனால் கருப்புக்கட்டியை எப்படி பாதுகாப்பது என்பது தெரியாமல் தவிக்கிறோம்’’ என்றார்.

வட்டன்விளையைச் சேர்ந்த கருப்புக்கட்டி உற்பத்தியாளரும், மொத்த வியாபாரியுமான செல்வக்குமார் கூறுகையில் , ‘‘குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே நடைபெறும் பனைத்தொழிலை பாரம்பரியமாக மூன்று தலைமுறைகளாக செய்து வருகிறோம். பனை ஏறுவதற்கென கேரளம், வேம்பார் பகுதிகளில் இருந்து பனைத்தொழிலாளிகளை தங்க வைத்து பனை ஏறி வருகிறோம். கருப்புக்கட்டிகளை முறையாக பராமரித்து, புகை சரியாக போட்டு வந்தால் எந்த குறைபாடுகளும் வராது. ஆனால் சீனி கலந்த கலப்பட கருப்புக்கட்டிகளை எப்படி பராமரித்தாலும் அது குறிப்பிட்ட நாட்களுக்குள் பூஞ்சை வளரும், கசியும். ஆனால் ஒரிஜினலில் பூஞ்சை வளர்ந்தாலும் புகை போட்டால் அது மறைந்து விடும்’’ என்றார்.

Tags : Udankudi ,
× RELATED தேரியூர் கோயிலில் பூக்குழி திருவிழா