×

திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கக்கோரி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருச்செந்தூர், பிப். 21: திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கக் கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர். படகுகளில் கருப்புக்கொடியும் கட்டினர்.  திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட அமலி நகர் மீனவ கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 180 பைபர் படகுகள் உள்ளன. இந்த படகுகள் மூலம் இப்பகுதி மக்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருவது வழக்கம். அவ்வாறு மீன் பிடிக்க செல்லும் போதும், வரும் போதும் தூண்டில் பாலம் இல்லாததால் கடல் அரிப்பு மற்றும் படகுகள் சேதமடைந்து உயிர் சேதம் ஏற்படுவதாக இப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மீனவர்களின் நீண்டநாளைய கோரிக்கையாகும்.

இந்நிலையில் தூண்டில் பாலப்பணியை உடனடியாக ஆரம்பிக்க வலியுறுத்தி அமலிநகர் மீனவர்கள் பைபர் படகுகளில் கருப்புக் கொடி கட்டி காலவரையற்ற போராட்டத்ைத துவங்கி உள்ளனர். போராட்டத்தில் அமலிநகர் ஊர்த் தலைவர் பாஸ்கரன், பொருளாளர் குளோரியான் மற்றும் ஊர் கமிட்டியினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Tiruchendur Amalinagar ,
× RELATED திருச்செந்தூர் அமலிநகரில் ஓராண்டுக்கு பிறகு அமைதி