×

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு துறையினரின் தத்ரூப தீத்தடுப்பு ஒத்திகை

தூத்துக்குடி, பிப். 21: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு துறையினரின் தத்ரூப தீத்தடுப்பு ஒத்திகை பார்வையாளர்களை கவர்ந்தது.  தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் அவசர காலங்களில் ஏற்படும் தீத்தடுப்பு மற்றும் உயிர் மீட்பு குறித்த ஒத்திகை பயிற்சி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையில் 40 வீரர்கள் கலந்து கொண்டு திடீரென ஏற்படும் தீயை தடுப்பது, பேரிடர் காலங்களில் அடுக்குமாடி கட்டிடங்களில் சிக்கி உயிருக்கு போராடுபர்களை கயிறு மூலம் பத்திரமாக மீட்பது குறித்து தத்ரூப செயல்விளக்கத்துடன் செய்து காட்டி அசத்தினர்.

மேலும் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் திடீரென ஏற்படும் தீயை எப்படி தடுத்து அணைப்பது என்பது குறித்தும், தண்ணீர், பவுடர், வேதிப்பொருட்கள் கொண்டு தீயை அணைப்பது போன்றவற்றை நேரடியாக செய்து காட்டினர். தீ விபத்து காலங்களில் காயமடைந்தவர்களை மீட்டு வருவது, மழை வெள்ள காலங்களில் பொதுமக்களை மீட்பது, சமையல் எரிவாயு விபத்தில் இருந்து பாதுகாப்பது, அரசு அலுவலகங்களில் உள்ள சிறு தீயணைப்பான் கருவிகளை பயன்படுத்தி அரசு அலுவலர்களே தீயை அணைப்பது போன்றவை குறித்தும் அலுவலக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மழை வெள்ளத்தின்போது வீட்டிலுள்ள குடம், தண்ணீர் கேன், டியூப், குடிநீர் பாட்டில்கள், பெரிய கேன்களை பயன்படுத்தி தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
முன்னதாக கலெக்டர் செந்தில்ராஜ், தீயணைப்பு துறையினருக்கான நவீன இயந்திரங்கள், பாதுகாப்பு சாதனங்களை வழங்கினார். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுடன் தத்ரூபமாக நடந்த இந்த ஒத்திகை பயிற்சி முகாம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Tags : Tuticorin Collector ,
× RELATED தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு குழு...