×

நெல்லை மாவட்டத்தில் 62 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

நெல்லை, பிப். 21:  நெல்லை மாவட்டத்தில் பிசான பருவ நெல் அறுவடையை முன்னிட்டு, 62 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.  நெல்லை மாவட்டம் நெல் சாகுபடி நிறைந்த மாவட்டமாகும். மாவட்டத்தைப் பொருத்தவரை தென் மேற்கு பருவமழை காலத்தில் கார் பருவ நெல் சாகுபடியும், வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான பருவ நெல் சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் திறக்கப்படும். கார் பருவ நெல் சாகுபடிக்கு ஜூன் 1ம் தேதியும், பிசான பருவ நெல் சாகுபடிக்கு அக்.18ம் தேதியும் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர மணிமுத்தாறு பெருங்கால் பாசனம் மூலமும் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 கடந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை மிக குறைவு என்ற போதிலும், பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி குறித்த காலத்தில் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் 68 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பிசான பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஒரு சில பகுதிகளில் பிசான நெல் அறுவடை துவங்கியுள்ளது.

 விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை நேரடியாக ெநல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய அவரவர் பகுதியிலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஒவ்வொரு பருவ நெல் அறுவடையின் போதும் திறக்கப்படும்.

தற்போது பிசான நெல் அறுவடையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் 62 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை நெல்லை தாலுகாவில் கங்கைகொண்டான், சீதபற்பநல்லூர், மேலக்கல்லூர், கங்கைகொண்டான் - 2 அணைத்தலையூர், நாரணம்மாள்புரம் - 2, குப்பக்குறிச்சி, சுத்தமல்லி, பாலாமடை ஆகிய 8 இடங்களிலும், நாங்குநேரி தாலுகாவில் கீழ காடுவெட்டி, திருக்குறுங்குடி, மூன்றடைப்பு, அம்பலம், மூலைக்கரைப்பட்டி சிந்தாமணி ஆகிய 5 இடங்களிலும், பாளை. தாலுகாவில் வெள்ளக்கோயில், குன்னத்தூர், கீழநத்தம், கீழப்பாட்டம், அரியகுளம், முன்னீர்பள்ளம், சிவந்திப்பட்டி முத்தூர், நடுவக்குறிச்சி, செங்குளம், திடியூர், படப்பக்குறிச்சி, தருவை, பத்தமடை ஆகிய 13 இடங்களிலும், மானூர் தாலுகாவில் களக்குடி, அழகியபாண்டியபுரம், தென்கலம், மானூர், பள்ளமடை ஆகிய 5 இடங்களிலும், அம்பை. தாலுகாவில் பிரம்மதேசம், சாட்டுப்பத்து, வெள்ளாங்குளி, கீழ அம்பாசமுத்திரம், அயன்சிங்கம்பட்டி, மன்னார்கோவில், வடக்கு கல்லிடைக்குறிச்சி, பள்ளக்கால் புதுக்குடி, கோடாரங்குளம், விகேபுரம் -2, ஊர்க்காடு, தெற்கு கல்லிடைக்குறிச்சி, தெற்கு பாப்பாங்குளம், பொட்டல், அயன்திருவாலீஸ்புரம் ஆகிய 15 இடங்களிலும், சேரன்மகாதேவி தாலுகாவில் சேரன்மகாதேவி, வடக்குகாருகுறிச்சி, வீரவநல்லூர், மேலச்செவல், கோபாலசமுத்திரம், வடக்கு அரியநாயகிபுரம், திருப்புடைமருதூர், அரிகேசவநல்லூர், பாப்பாக்குடி, பனையங்குறிச்சி, அத்தாளநல்லூர், தெற்குவீரவநல்லூர், கரிசல்பட்டி, கங்கனாங்குளம் ஆகிய 14 இடங்களிலும், திசையன்விளை தாலுகாவில் வாழைத்தோட்டம், ராதாபுரம் தாலுகாவில் வள்ளியூர் என தலா ஒரு இடத்திலுமாக மொத்தம் 62 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

திறப்பு குறித்து அறிக்கை நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டிய இடத்தையும், திறக்க வேண்டிய காலத்தையும் கலெக்டர் தெரிவித்துள்ளார். அதன்படி நெல் கொள்முதல் நிலையங்கள் உரிய நாளில் திறக்கப்பட்ட விவரம் குறித்து அறிக்கை அனுப்புமாறும் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Nellai district ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை...