×

16 குளங்கள் பாசன வசதி பெறும் வகையில் களக்காடு மலையடிவாரத்தில் புதிதாக அணை யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தல்

களக்காடு,பிப்.21: 16 குளங்கள் பாசன வசதி பெறும் வகையில் களக்காடு மலையடிவாரத்தில் புதிய அணை கட்ட வேண்டும் என்று யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. களக்காடு யூனியன் கூட்டம் தலைவர் இந்திரா ஜார்ஜ் கோசல் தலைமையில் நடந்தது. ஆணையாளர்கள் அப்துல்லா, மணி, துணை தலைவர் விசுவாசம் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் ஜார்ஜ்கோசல், தமிழ்செல்வன், சத்ய சங்கீதா, சங்கீதா, விஜயலட்சுமி, வனிதா, தளவாய் பாண்டியன், மேலாளர் சங்கரன் மற்றும் யூனியன் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். யூனியன் ஊழியர் முத்தரசன் தீர்மானங்களை வாசித்தார். செங்களாகுறிச்சி, கோவிலம்மாள்புரம், புலியூர்குறிச்சி, வடுகச்சிமதில், படலையார்குளம், தேவநல்லூர், செங்களாகுறிச்சி, சிங்கிகுளம் பஞ்சாயத்துகளில் பேவர் பிளாக் அமைத்தல், கல்லடிசிதம்பரபுரத்தில் தடுப்பு சுவர் கட்டுவது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இதைத்தொடர்ந்து கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் பேசுகையில் ‘‘டெங்கு பணியாளர்களுக்கு மாதம் ரூ.1.50 லட்சம் செலவு செய்யப்படுகிறது. அவர்களை கண்காணிப்பது யார்?. ஜெ.ஜெ.நகர், படலையார்குளம் மக்களுக்கு பட்டா வழங்கவும், சத்திரம் கள்ளிகுளத்தில் புதிய ரேசன் கடை கட்டிடத்தை திறக்கவும், 16 குளங்கள் பாசன வசதி பெறும் வகையில் களக்காடு சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் புதிய அணை கட்டவும், ஓடைகளை அளவீடு செய்து, பாதை அமைக்கவும், சிதம்பராபுரம் வழியாக அரசு பஸ்கள் இயக்கவும், தலையணையில் உள்ள தென்வீதிக்காலை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதேபோன்று கவுன்சிலர் சத்ய சங்கீதா பேசுகையில் ‘‘புலியூர்குறிச்சி பஞ்சாயத்தில் பணிபுரியும் 100 நாள் திட்ட ஊழியர்களுக்கு ரூ.230 வரை தான் அதிகபட்சமாக சம்பளம் வழங்கப்படுகிறது. இது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த ஆணையர் மணி, ‘அவர்கள் பணி செய்ததற்கு ஏற்றாற் போல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Tags : Kalakadu ,
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...