×

மயிலாடும்பாறை அருகே வண்ணாத்திப்பாறையில் பலத்த சேதமடைந்த சாலை புதிதாய் அமைக்க கோரிக்கை

வருசநாடு, பிப். 21: மயிலாடும்பாறை அருகே வண்ணாத்திப்பாறையில் உள்ள பலத்த சேதமடைந்த சாலையை புதிதாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடும்பாறை அருகே வண்ணாத்திபாறை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வண்ணத்திப்பாறை வரையிலான சுமார் 3 கி.மீ தொலைவில் சாலை போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் சேதம் அடைந்து குண்டும். குழியும் காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால் தற்போது வரை சாலை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் பல நேரங்களில் அவை விபத்தில் சிக்கி வருகிறது.  அதுமட்டுமின்றி சேதமடைந்த சாலை காரணமாக விவசாய விளை பொருட்களை தேனி, சின்னமனூர் உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்ப சிரமம் ஏற்படுவதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.  எனவே மாவட்ட அதிகாரிகள் விவசாயிகளின் நலன் கருதி வண்ணாத்திப்பாறை கிராமத்தில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vannathiparai ,Mayiladumparai ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் கண்ணகி கோயில்...