வேலை வாய்ப்பு படிப்பு படிக்கஅரசு தொழிற்பயிற்சி நிலையம் வேண்டும் : பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவாடானை, பிப்.21:  திருவாடானையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருவாடானை வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் போதிய வளர்ச்சியை எட்ட முடியாத இடத்தில் நீண்ட காலமாக இருந்து வந்தது. இப்போது ஓரளவு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.

இதில் ஏராளமான மாணவ,மாணவிகள் படிக்கின்றனர். நீண்ட கால கோரிக்கைக்கு பின்பு திருவாடானையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கலைக் கல்லூரி துவங்கப்பட்டு கிராமப்புறங்களில் முடங்கிக் கிடந்த பெண்கள் திருவாடானையில் கல்லூரி திறக்கப்பட்டதால் தடையின்றி மேல்படிப்பு படித்து வருகின்றனர். அதேவேளையில் தொழில் கல்வி படிக்க வேண்டுமென்றால் 40 கிலோ மீட்டர் தாண்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அல்லது ராமநாதபுரத்திற்கு செல்ல வேண்டும். எனவே திருவாடானையில் அரசு தொழிற்கல்வி நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், இப்பகுதியில் அதிக அளவில் பெண்கள் திருவாடானை கல்லூரி வந்ததால் மேல்படிப்பை தொடர்கின்றனர். ஆனால் மாணவர்களை பொருத்த மட்டில் அதிகமானோர் படிப்பை பாதியில் விட்டு விட்டு கொத்தனார்,சித்தாள்,டிரைவர் அல்லது வெளிநாடு போன்ற பணிகளுக்கு சென்று விடுகின்றனர். எனவே குறைந்த வருடத்தில் படிப்பை முடித்துக்கொண்டு அதேநேரத்தில் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொண்டு அதன் மூலம் குடும்ப வருமானத்தை பெருக்கி கொள்ளும் வகையில் உள்ள ஒரே படிப்பு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ)அதுவும் செலவின்றி அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறக்க வேண்டும் என அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். வேறு தனியார் தொழிற்பயிற்சி நிலையமும் இங்கு இல்லை. அதில் பணம் கட்டி படிக்கின்ற அளவிற்கு இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியும் இல்லை. ஏனென்றால் அதிகமானோர் விவசாயக் கூலிகளாக உள்ளனர். எனவே அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: