கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானலில் கோடை சீசனுக்காக ரோஜா பூங்கா தயாராகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ளது ரோஜா பூங்கா. தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இங்கு 1500 வகைகளுக்கும் அதிகமான ரோஜா பூக்கள் உள்ளன. பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ரோஜா பூங்காவில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ரோஜா பூங்கா மேலாளர் பார்த்தசாரதி கூறுகையில், ‘‘எதிர்வரும் மே மாதத்தில் இந்த பூங்காவில் உள்ள பல லட்சம் ரோஜா மலர்கள் பூக்கும் வகையில் கவாத்து பணிகள் நேற்று தொடங்கின. ரோஜா பூக்கள் பூக்கும் வகையிலும் அதிக அளவில் பூக்கள் பூக்கும் வகையிலும் இந்த கவாத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று காலை இந்த கவாத்து பணிகள் தொடங்கின. தொடர்ந்து இரண்டு மாதங்கள் ரோஜா பூங்காவில் உள்ள பல லட்சம் ரோஜா மலர் செடிகள் கவாத்து பணிகள் நடைபெறும். இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் ரோஜா செடிகள் பராமரிப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெறும். பணிகள் முடிந்து வரும் மே மாதத்தில் நடைபெறக்கூடிய கோடை சீசனுக்கு இந்த கவாத்து செய்யப்பட்ட ரோஜா மலர் செடிகள் அதிக அளவிலான பூக்கள் பூக்கும்’’ என்றார்.
