×

உழவர் சந்தை அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தி தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

தாராபுரம், பிப். 21: தாராபுரம் உழவர் சந்தை, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகங்களை  சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தி ஆர்டிஓ  அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.  தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் ஆர்டிஓ குமரேசன் தலைமையில் தாசில்தார் ஜெகஜோதி, பொதுப்பணித்துறை அமராவதி வடிநில பாசன கோட்ட அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், உழவர் உழைப்பாளர் கட்சி, அமராவதி பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் அதன் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாக தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து நிருபர்களிடம் கூறியதாவது: தாராபுரம் நகரின் மையத்தில் உள்ள உழவர் சந்தையை சீர்குலைக்கும் வகையில் வெளிப்புறம் தனியார் நபர்கள் காய்கறி கடைகளை வைத்து வியாபாரம் செய்கின்றனர். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது. இப்பிரச்சினை குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே விவசாயிகள் நலன் கருதி உழனர் சந்தையை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதுடன் ஆக்கிரமிப்பாளர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் தாராபுரம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சுற்றிலும் பல்வேறு சாலையோர கடைகளை வைத்து நடத்தி அதில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் துரித உணவுகள் மாசடைந்த பழ வகைகள், தரமற்ற வெயில் கால பானங்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்து மாணவர்களின் நலனை சீர்குலைப்பதுடன் பொதுமக்களையும் நோய் தொற்றுக்கு உள்ளாக்கி வருகிறார்கள். இதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மேலும் தாராபுரம் நகரின் மையப் பகுதியில் செல்லும் ராஜவாய்க்கால் பாசன கால்வாயில் நகரின் கழிவுகள் அனைத்தும் கலக்கிறது. எனவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தூய்மைப்படுத்திய பின் ராஜாவாய்க்காலில் விட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   கோமாரி மற்றும் அம்மை நோய் தாக்கி தற்போது ஏராளமான கால்நடைகள் உயிரிழப்பை சந்தித்து வருகின்றன. இதை தடுக்க வேண்டும். எரகாம்பட்டி பகுதியில் அரனி வாய்க்கால் என்ற பாசன கால்வாய்களை பிஏபி பாசன விவசாயிகளே ஆக்கிரமித்துள்ளனர். இதில் ஆர்டிஓ தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும். மேலும் தரகம்பட்டி பகுதியில் விலை மதிப்புமிக்க ஓடை கற்களை சமூக விரோதிகள் சிலர் தோண்டி எடுத்து லாரிகளில் கடத்திச் செல்கிறார்கள்.

இதை தடுத்து நிறுத்த வேண்டும். இதேபோல் பல்வேறு கோரிக்கைகள் ஆர்டிஓவிடம் புகாராக கூறப்பட்டது, இதனை உரிய முறையில் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக ஆர்டிஓ குமரேசன் உறுதியளித்தார். இவ்வாறு தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் காளிமுத்து செய்தியாளர்களிடம் கூறினார்,

நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுப்பிரமணியம் குண்டடம் வட்டார தலைவர் பாலசுப்பிரமணி தாராபுரம் வட்டார தலைவர் கதிர்வேல் இளைஞர் அணி கிருஷ்ணமூர்த்தி, உழவர் உழைப்பாளர் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி அலங்கியம் பழனிசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக  உழவர் சந்தை, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகங்களை சுற்றிலும்  அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தி ஆர்டிஓ அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Tags : Tarapuram RTO ,
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...