திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 9.30 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை

திருப்பூர், பிப். 21: திருப்பூர்  மாவட்டத்தில் ஒரே நாளில் 9.30 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க  மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டது. விடுபட்டவர்களுக்கு இன்று 2-வது கட்ட  முகாம் நடைபெறுகிறது. தமிழக அரசு தமிழக மக்களின் நலனுக்காக ஏராளமான  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், பொதுமக்கள் பயனடைந்து  வருகிறார்கள். இதுபோல், பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்கிற பெண்கள்  என அனைத்து தரப்பினருக்கும் சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி  வருகிறது.

இந்நிலையில், தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டமாக திருப்பூர் இருந்து  வருகிறது. இங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து  வருகிறார்கள். இதனால், திருப்பூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்  தடுப்புத்துறை சார்பாக தேசிய குடற்புழு நீக்கும் தினம் கடந்த 14-ந் தேதி  திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டது.

இதற்காக, கடந்த மாதமே  சுகாதாரத்துறை சார்பில் கணக்கெடுக்கும் பணி, தொடங்கி நிறைவேற்றப்பட்டது.  அதன்படி, தேசிய குடற்புழு நீக்கும் தினத்தில் ஒரே நாளில் 7 லட்சத்து 39  ஆயிரத்து 945 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது: தேசிய  குடற்புழு நீக்க தினம் ஒரு வாரம் அனுசரிக்கப்படும். குடற்புழு தொற்றினால்  ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் சுகவீனம், படிப்பில் கவனமின்மை  உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றில் இருந்து விடுபட அல்பெண்டசோல் மாத்திரைகளை  உட்கொள்வது அவசியம்.

திருப்பூர் மாவட்டத்தில் 1 வயது முதல் 2 வயது உள்ள  குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள்  மற்றும் 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கும் (கர்ப்பிணிகள்,  பாலூட்டும் தாய்மார்கள் தவிர) இந்த குடற்புழு மாத்திரைகள் வழங்க ஏற்பாடு  செய்யப்பட்டது.

1 வயது முதல் 19 வயது வரை உள்ள 7.8 லட்சம் பேருக்கும், 20  வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் 2.4 லட்சம் பேருக்கும் குடற்புழுநீக்க  மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டது. இதில் 14-ந் தேதி நடந்த முகாமில் ஒரே  நாளில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 945 குழந்தைகளுக்கும், 1 லட்சத்து 90  ஆயிரத்து 186 பெண்களுக்கும் என மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரத்து 131  பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூலம்  மாத்திரைகள் வழங்கப்பட்டு விட்டன.

கிட்டத்தட்ட 93 சதவீதம் பேருக்கு  குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்று  (செவ்வாய்க்கிழமை) 2-வது கட்ட முகாம் நடைபெறுகிறது. இதில், 19 வயதுக்கு  உட்பட்ட மீதமுள்ள 47 ஆயிரத்து 231 குழந்தைகளுக்கும், 14 ஆயிரத்து 315  பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட இருக்கின்றன. தமிழக  அரசு உத்தரவுப்படி 100 சதவீத இலக்கை அடைவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: