×

கோவை முக்கிய புறவழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றக்கோரி வரும் 26ம் தேதி கோவையில் நடைபயணம்: கொமதேக அறிவிப்பு

சூலூர், பிப்.21: கோவை  மாவட்டத்தின் முக்கிய புறவழிச்சாலையான எல்அன்டி பைபாஸ் சாலையை 6 வழிச்சாலையாக ஒன்றிய அரசு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும் 26ம் தேதி நடைபயணம் நடத்தப்படும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் அறிவித்தார். இதுகுறித்து சூலூர் அருகே சின்னியம்பாளையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: சேலம்- கொச்சி சாலையில் நீலம்பூரில் இருந்து மதுக்கரை வரை உள்ள சாலை இருவழிச்சாலையாக உள்ளது. கோவை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு, இந்த சாலை ஆறுவழி சாலையாக மாற்றபடாமல் இருப்பதே முக்கிய காரணமாக உள்ளது.

அதிக அளவில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த சாலை எப்போதோ ஆறுவழிச்சாலையாக மாறி இருக்க வேண்டும். ஆனால் இதுவரை இருவழிச்சாலையாகவே உள்ளது. சாலையை பயன்படுத்த எல்அன்டி நிர்வாகம் கட்டணம் வசூலித்தும் சாலை விரிவாக்கம் செய்யவில்லை.  பொள்ளாச்சி சாலை சந்திப்பு, திருச்சி சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.

நீலம்பூர்-மதுக்கரை வரை உள்ள இருவழிச்சாலையை  ஆறு வழிச்சாலையாக மாற்ற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 26ம்தேதி மதுக்கரையில் இருந்து  நீலம்பூர் வரை எனது தலைமையில் நடை பயணம் மேற்கொள்ளப்படும். பல்வேறு சூழலில் நாமக்கல் எம்பி மூலம் ஒன்றிய தரைவழி அமைச்சருக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை ஆறுவழிச்சாலையாக மாற்றி தரப்படவில்லை.

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை எந்த பிரச்னையையும் பத்திரிக்கையாளர் மத்தியில் பேசுவதோடு நின்று விடுகிறார். ஆக்கப்பூர்வமான எதையாவது அண்ணாமலை செய்திருக்கிறாரா என்றால் இல்லை. ஒன்றிய அரசு கங்கையை சுத்தப்படுத்த 20 ஆயிரம் கோடி கொடுத்துள்ளனர். அதேபோல நொய்யல், காவிரி ஆகிய நதிகளை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கவேண்டும். பாஜ தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இறங்கவில்லை. அரசியலுக்காக பல்வேறு விஷயங்களை பேசுகிறார்களே தவிர மாநில வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Coimbatore ,26th ,-lane ,Komadeka ,
× RELATED கோவையில் இருந்து கேரளாவிற்கு கனிம...