×

ஊட்டி - குன்னூர் சாலையில் விரிவாக்க பணி தூசு மண்டலமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

ஊட்டி,பிப்.21: ஊட்டி - குன்னூர் சாலையில் பல இடங்களிலும் சாலை விரிவாக்க பணி நடைபெற்றும் நிலையில் மண் மற்றும் தூசு பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  நீலகிரி மாவட்டத்தை பிற சமவெளி பகுதி மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையாக ஊட்டி - குன்னூர் - மேட்டுபாளையம் சாலை உள்ளது. இச்சாலையில் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஊட்டி - குன்னூர் இடையே வரை 14 கி.மீ., தூரத்திற்கு ரூ.27 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை குறுகலாக இருந்த இடங்கள்,விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து விரிவாக்கம் செய்து தடுப்புச்சுவர் அமைத்தல், மழைநீர் வழிந்தோட வசதியாக நிலத்தடி குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. பல இடங்களில் சாலையின் நடுவே பள்ளம் தோண்டி நிலத்தடி மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது மழையின்றி வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், சாலையில் தொண்டப்பட்டுள்ள பள்ளங்களில் கொட்டிய மண் விரிவாக்கம் செய்யப்பட்ட மண் மீது வாகனங்கள் சென்று வருவதாலும், காற்று வீசுவதாலும் மண் மற்றும் தூசு பறந்து ஒரே புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கடும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காற்றில் பறக்கும் மண் தூசுகள் சாலையில் நடந்து செல்பவர்களின் கண்களிலும் விழுந்து வருகின்றன. மேலும் இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க கூடிய அபாயமும் நீடிக்கிறது. எனவே தூசி பறக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Ooty-Coonoor ,
× RELATED இரண்டாவது நாளான நேற்று யாரும் வேட்புமனுதாக்கல் செய்யவில்லை