×

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் 55 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படும்

புதுக்கோட்டை, அக்.1: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறனர். அந்தவகையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 783.30 மி.மீ. ஆகும். 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவான 410.30 மி.மீ.க்கு பதிலாக 563.53 மி.மீ. அளவு மழை பெறப்பட்டுள்ளது. 153.23 மி.மீ கூடுதலாக பதிவாகியுள்ளது.

பயிர் சாகுபடியை பொருத்தவரை 2022-2023 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முடிய நெல் 10202 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 1112 எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 756 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 5383 எக்டர் பரப்பிலும், கரும்பு 1884 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 43 எக்டர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 12299 எக்டர் பரப்பளவிலும் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பயிர்ச் சேதத்தை பொருத்தவரை டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை பெய்த கனமழையால் பாதிப்படைந்த 1339.705 எக்டர் நெல், உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கும், நிவாரணத் தொகை ரூ.530.22 லட்சம் அரசிடமிருந்து வரப்பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இடுபொருட்கள் இருப்பை பொருத்தவரை புதுகோட்டை மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 169.262 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 46.433 மெ.டன் பயறு விதைகளும், 31.476 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 6.532 மெ.டன் சிறுதானிய விதைகளும், 0.300 மெ.டன் எள் விதைகளும், 0.537 மெ.டன் பசுந்தாள் உரவிதைகளும் இருப்பில் உள்ளன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 1102 ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதால் 1374 விவசாயிகள் பயன்பெறுகிறார்கள். 2021-22ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 68 தரிசு நிலத் தொகுப்புகளைப் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு 32 தரிசு நில தொகுப்புகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டிற்குப் புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டுஇ அவற்றில் 68 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கிராமப் பஞ்சாயத்துகளில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. தரிசு நில தொகுப்புகளை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.

2022-23ம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1100 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 1051 பயனாளிகளுக்கு 1063 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை ரூ.2 கோடியே 56 லட்சம் நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவசாயிகளின் நலனிற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் இன்று (1ம் தேதி) முதல் 55 நேரடி நெல்கொள்முதல் நிலைங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன. எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, பருவ மழைக்காலங்களில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், அசோலா வளர்ப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் நேரடி நெல் விதைப்பு சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த மடிப்பேடுகளை வெளியிட்டார்.

Tags : Pudukottai district ,
× RELATED வாக்குசாவடிகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பது: போலீசார் தீவிர ஆலோசனை